இரணியல் முதல் முட்டம் வரையிலான மாநில நெடுஞ்சாலையில் பிரதான சந்திப்பு, மருத்துவமனை, மருத்துவ கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 12 வேகத்தடைகள் இருந்தன. இதனால் வாகனங்களில் செல்வோர் குறிப்பிட்ட பகுதிகளில் வேகத்தை கட்டுபடுத்துவதால் அந்தந்த பகுதியில் பொதுமக்கள் எளிதில் சாலையினை கடக்கவும், மக்கள் பயமின்றி பயணிக்கவும் உகந்ததாய் இருந்தது.
குறிப்பாக முட்டம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், முதியோர், பெண்கள் இச்சாலையினை கடந்துவர வேண்டிய நிலையில், காவல் சோதனைச்சாவடியும் குறிப்பிட்ட இடத்தில் உள்ளதால் வேகமாக வரும் வாகனங்களால் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை தவிர்க்கும் வகையில் இங்கிருந்த வேகத்தடை அவர்களுக்கு உதவிகரமாக அமைந்தது. இதுபோலவே இங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி முன்பாகவும் மக்கள் நலன்கருதி வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இரணியல் -முட்டம் மாநில நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இச்சாலையில் அமைக்கப்படும் சாலைப்பணியின் போது வேகத்தடைகள் அனைத்தும் புதைந்து போனது. இதனால் இச்சாலையில் வேகத்தடைகள் இல்லாததால் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான முட்டம் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளும், இதன் சுற்றுவட்டார பகுதி கிராம மக்களும் குறிப்பிட்ட சாலையில் பீதியுடன் பயணிக்கும்/கடக்கும் பரிதாப நிலை உள்ளது.
எனவே நோயாளிகள், சுற்றுலா பயணிகள், கிராம மக்கள் பாதுகாப்பு கருதி IRC யின் வழிகாட்டுதல்கள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிகளின்படி ஏற்கனவே அமைக்கப்பட்ட பகுதிகளில் வேகத்தடை அமைத்திட வேண்டும். மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஏற்பட்டு உள்ள நிலையினை தடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரிகோட்ட செயலாளர் M அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, துணை தலைவர் M.A. டைட்டஸ், அமைப்பு செயலாளர் புதுக்கடை பாண்டியன், மீனவர் அணிச் செயலாளர் A.ததேயுஸ், குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் D.தேவதாஸ் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply