சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் கோரிக்கை

தமிழ்நாட்டில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தலைவர் மற்றும் மேயர் பதவிகள் மறைமுகத்தேர்தல் மூலம் தற்போது தேர்ந்தெடுக்கப் படுகின்றன. அதாவது மக்கள் நேரடியாக வாக்களிக்காமல் தேர்வு செய்யப்பட்ட வார்டு கவுன்சிலர்கள் தங்களில் ஒருவரை தலைவராக தேர்வு செய்கின்றனர். கடந்த 2016ல் அ.தி.மு.க அரசு நேரடித் தேர்தல் முறையை ரத்து செய்து மறைமுகமாக்கியது. அதன்பின் இப்போதுவரையில் மறைமுகத்தேர்தலே நடைமுறையில் உள்ளது.

இந்தியாவின் 74வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டம்(1992) உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை வழிகாட்டுதலைத் தருகிறது. நகர் பாலிகா எனப்படும் இச்சட்டம் 1.6.1993 முதல் அமலுக்கு வந்தது.இதன்படி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தும் தேர்தல் முறையை மாநிலங்களே தீர்மானிக்கின்றன.இதன் கீழ் மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிஷா, பீகார், ஹரியானா ஆகிய மாநிலங்கள் நகர்புற உள்ளாட்சிகளில் தலைவர் பதவிக்கு மக்களே நேரடியாக வாக்களிக்கும் முறையினை பின்பற்றி வருகிறது.

தமிழகத்திலும் கடந்த 2018ல் நேரடி தேர்தல் தொடர்பாக சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மறைமுகத் தேர்தலில் தலைவர் தங்கள் வார்டுக்கு மட்டுமே கவனம் செலுத்தும் நிலை உள்ளதால் நேரடி தேர்தல் சிறந்தது என அறிக்கையில் தெரிவித்து இருந்தனர். ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு அருகில் உள்ள அரசு என்பதால் அதன் தலைமைத்துவம் வலுப்பெறுவது மிகவும் அவசியம். மறைமுக முறைத்தேர்தல் உள்கட்சி அரசியல், நம்பிக்கை இழப்பு தீர்மானம் மூலம் எளிதில் பதவி இழக்க நேரிடலாம். நேரடி தேர்தலால் நிலையான பதவிக்காலம் ஏற்படுவதோடு நீண்டகால திட்டமிடுதலுக்கும் வாய்ப்பாகும்.

ஒரு வார்டு பகுதி என்று இல்லாமல் அனைத்துப்பகுதி மக்களின் வாக்குகளையும், நம்பிக்கையினையும் பெற வேண்டிய நிலையில் நேரடி தேர்தல் மூலம் எல்லாப் பகுதியின் வளர்ச்சிக்கும் பொறுப்பு ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் தலைவர்/மேயர் பதவியில் போட்டியிடுபவர்களுக்கு ஏற்படும். நகரின் முக்கிய பிரச்னைகளில் ஒருங்கிணைந்த திட்டங்கள் அவர்களால் கொண்டுவர முடியும். மறைமுகத் தேர்தலில் குதிரை பேரம், பணம் மற்றும் ஜாதிய ஆதிக்கம் தான் ஏற்படும். இதனால் தான் இரண்டாம் நிர்வாக சீர்திருத்த ஆணையம் நேரடி தேர்தலை வலுவாக பரிந்துரை செய்தது.

இருப்பினும் அரசியல் நோக்கங்களுக்காக நேரடி தேர்தல் நடைமுறைப்படுத்தாமல் ஆட்சியாளர்கள் காலந்தாழ்த்தி வருகின்றனர். நேரடி தேர்தல் முறையினால் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை மேலும் ஜனநாயகப்பூர்வமாகவும், மக்கள் சார்ந்ததாகவும் மாற்ற முடியும். மேலும் மக்கள் பங்கேற்பு மூலம் மக்களாட்சியை வலுப்படுத்த முடியும். உள்ளாட்சிகள் மேம்பட உண்மையான அதிகார பரவலாக்கம், நிதி சுதந்திரம், நிர்வாகத்திறன் இணைந்தால் மட்டுமே முழுபலன் கிடைக்கும். எனவே உள்ளாட்சி சுயாட்சி அமைப்புகளாக செயல்படும் வகையில் தமிழக அரசு உரிய சட்டதிருத்தம் மேற்கொள்வது அவசியமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *