சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

ஆரோக்கியத்திற்கு ஆபத்தான ஆஸ்பெஸ்டாஸ் தடை செய்வது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டால் ஏற்படும் புற்றுநோய் மற்றும் சுகாதார அபாயங்கள்

ஆஸ்பெஸ்டாஸ் மனிதர்களுக்கு புற்றுநோயினை உறுதியாக அளிக்கும் பொருள் என உலக சுகாதார அமைப்பு மற்றும் IARC (International Agency for Research on Cancer) நிறுவனம் அறிவித்து உள்ளன. இயற்கையாகக் கிடைக்கும் இழைமத் தாதுப்பொருளான ஆஸ்பெஸ்டாஸ் கொண்டு செய்யப்படும் கூரைத்தகடுகள், காப்புப் பொருட்கள், பிரேக் லைனிங் உள்ளிட்ட பொருட்கள் விலைமலிவாக உள்ளதாலும், வெப்பம் தாங்கும் தன்மை, வலிமை உள்ளிட்ட காரணங்களால் அதிகமாக நாம் பயன்படுத்தி வருகின்றோம். இதன் தீமையினை கருதி பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்வீடன், துருக்கி, ஜப்பான், தென்கொரியா, ஈரான், குவைத், தைவான், கனடா, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட 72 நாடுகள் இதனை பயன்படுத்திட தடை விதித்து உள்ளன.

ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்துவதால் மெசோதீலியோமா எனப்படும் நுரையீரல் வயிறு, இதயத்தை சுற்றிய சவ்வுகளில் வரும் அரிய, ஆக்ரோஷமான புற்றுநோய் வருகிறது. ஆஸ்பெஸ்டோசிஸ் எனப்படும் நுரையீரல் திசுக்கள் பாதிப்பால் ஏற்படும் புற்றுநோய், தொண்டை, கருப்பையில் ஏற்படும் புற்றுநோய், பிளீரல் பிளேக்குகள், வயிறு, பெருங்குடல் பாதிப்புகள் உள்ளிட்டவற்றால் உயிர் இழப்புகள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. சில பாதிப்புகள் அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் 10 முதல் 40 ஆண்டுகள் வரை கடந்து நோயின் தாக்கத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதனால் இதனை உடனிருந்து கொல்லும் நண்பன் என்று சொல்லலாம். உலகில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இதன் மூலம் இறந்து போகின்றனர்.

ரஷ்யா உலகின் மிகப்பெரிய ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக உள்ளது. உலக உற்பத்தியில் 66% ரஷ்யாவின் பங்கு உள்ளது. இதன் உற்பத்தியில் 80% ஏற்றுமதிக்கே செல்கிறது. இந்தியா இதில் பெரும்பங்கை வாங்குவதின் மூலமாக உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளராக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக சுமார் 5 லட்சம் டன் அளவில் ஆண்டுக்கு இந்தியாவில் ஆஸ்பெஸ்டாஸ் இறக்குமதி செய்யப்படுகிறது. கிராமப்புறங்கள் மட்டுமில்லாது நகர்புறங்களிலும் வீடுகள், பள்ளிகள், ஆலைகள் ஆகியவற்றின் கூரைகளுக்கு பயன்படுத்தும் நிலையில் தெரிந்தே நாம் நமது சந்ததியினரின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தினை ஏற்படுத்தி வருகின்றோம். ஆஸ்பெஸ்டாஸ் சிதைவினால் உருவாகும் தூசிகள் நமது நுரையீரலில் தங்கி விடுவதால் இதன் பாதிப்புகளை நாமே நமக்குள் விதைக்கின்றோம்.

இதன் விளைவுகளை WHO, ILO, IARC உள்ளிட்ட உலக சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை தெரிவித்தும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஆஸ்பெஸ்டாஸ் பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என வாதிடுகிறது. ஈரமான செய்முறைகளை பயன்படுத்தி தூசி ஏற்படுவதை குறைக்கும்படியும் கூறுகிறது. இதன் முழு தடைக்கு திட்டம் இல்லை எனவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்களின் சுகாதாரம் புறக்கணிப்பிற்கு உள்ளாகி உள்ளது. கார்சினோஜென் எனப்படும் புற்றுநோயினை உண்டாக்கும் பொருட்கள் உள்ளதால் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்திட உலக நாடுகள் தடை விதித்து உள்ள நிலையில் மக்கள் நலனை மனதில் கொண்டு இந்தியா இதனை பயன்படுத்திட முழுதடை விதித்திட வேண்டும்.

ஆஸ்பெஸ்டாஸ் கூரை சிதைவு, உடைதல், வெட்டுதல், தூசி பறத்தல் மூலமாக சுற்றுச்சூழலும் பாதிப்பிற்கு உள்ளாகி இதனை பயன்படுத்துபவர்கள் மட்டும் நில்லாது பலரையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளவற்றை அகற்றும் போது ஈரமான முறையை பயன்படுத்தி தூசி பரவாமல் பார்த்து நம்மை காத்துகொள்வது அவசியம். நமது கட்டுமானங்களில் இதன் தேவையினை முற்றிலுமாய் நிராகரித்து மாற்றுப் பொருட்களை தேர்வு செய்திட வேண்டும். Non.Asbestes Fibre cement Sheets/ மெட்டல் ஷூட்கள், டெரகோட்டா டைல்ஸ், மைக்ரோ கான்கிரீட் டைல்ஸ், Sandwich pands உள்ளிட்ட மாற்றுப் பொருட்களை நாம் பயன்படுத்திட வேண்டும். இதன்மூலம் நமது ஆரோக்கியத்திற்கு நேரும் ஆபத்திற்கு நாமே தடை விதிப்போம்.

ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டை இந்தியா தடை செய்ய வேண்டிய நேரமா?
புற்றுநோயை ஏற்படுத்தும் ஆஸ்பெஸ்டாஸ்: மக்களின் ஆரோக்கியம் ஆபத்தில்
உலக நாடுகள் தடை செய்த ஆஸ்பெஸ்டாஸ் இந்தியாவில் ஏன் தொடர்கிறது?
ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் பாதுகாப்பானவையா?
WHO எச்சரிக்கும் ஆஸ்பெஸ்டாஸ் அபாயங்கள்
ஆஸ்பெஸ்டாஸ் காரணமாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள்
ஆரோக்கியத்திற்கு ஆபத்தான கட்டுமானப் பொருட்களை தவிர்ப்போம்
ஆஸ்பெஸ்டாஸ் தடை: பொதுசுகாதாரத்தின் அவசியம்
மாற்று கட்டுமானப் பொருட்களை பயன்படுத்த வேண்டிய அவசியம்
ஆஸ்பெஸ்டாஸ் இல்லா இந்தியா உருவாகுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *