சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தனியார் பள்ளிகளின் வழிப்பறிக் கொள்ளைக்கு கட்டண அறிவிப்பு மட்டும் தீர்வு ஆகுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தனியார் பள்ளிகளில் கட்டண வசூல் குறித்து பெற்றோர்கள் கவலை தெரிவிக்கும் காட்சி

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குனரகம் அனைத்து தனியார் பள்ளிகளும் (நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், CBSE மற்றும் பிறவாரிய பள்ளிகள்) அங்கீகரிக்கப்பட்ட கட்டண விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு தெரிவிக்கும்படி இம்மாதம் 1 ந்தேதி உத்தரவிட்டது. கட்டண நிர்ணயக்குழு (Fee Determination Committee) நிர்ணயித்த வகுப்பு வாரியான கல்வி கட்டண விபரங்களை அறிவிப்பு பலகை மற்றும் பள்ளியின் இணையதளம், மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் எனவும் அறிவித்து உள்ளது. மறைமுகக் கட்டணம், கூடுதல் கட்டணங்களை தவிர்க்கும் வகையில் வெளியிடப்பட்ட இத்தகைய அறிவிப்பால் கட்டணம் குறித்து வெளிப்படை தன்மை ஏற்படும் என்பதால் இது வரவேற்கதக்கது.

ஆனால் இத்தகைய நடவடிக்கையினால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுவிடும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது தனியார் பள்ளிகள் Special Fee, activity Fee, Material Fee, Monthly Fee, Compulsory Package, Uniform, books, Training, Donation, Extra Curricular Fee, Function Fee, medical Test Fee என ஏதேதோ பெயரில் பிள்ளைகளிடம் பணத்தை உறிஞ்சுகின்றன. பெற்றோர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அளவுக்கு அதிகமாகவே வழிப்பறி செய்கின்றன. இருப்பினும் தங்கள் பிள்ளையின் கல்வியின் மீதான அக்கறையிலும், பள்ளி மீதான மோகத்திலும் கட்டணச் சுமையினை தாங்கிக் கொள்கின்றனர். தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தாத பிள்ளைகளை வகுப்புக்குள் அனுமதிக்காமலும், உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்துவது நடைமுறையில் உள்ளது.

இருப்பினும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி எந்த பெற்றோரும் இதுபற்றி வாய்திறப்பது இல்லை. இது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகி விடுகிறது. இதுபோலவே கல்வி கட்டணம் தொடர்பான அறிவிப்பும் பெயர் அளவில் இல்லாமல் அதனை கண்காணித்து புகார் தெரிவித்து நடைமுறைபடுத்துவது பெற்றோர் கைகளில் தான் இருக்கிறது. தமிழ்நாடு பள்ளிகள் (கட்டாய வசூலை ஒழுங்குபடுத்தும்) சட்டம் 2009ன் படி மறைமுக கட்டணங்கள் வசூலிப்பது சட்டவிரோதம் ஆகும். Section 9 ன்படி 3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை அளிக்க முடியும். அதிகமாக வசூலித்த பணத்தை திரும்பி தராத பட்சத்தில் குறிப்பிட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய இயலும். ஆனால் இதன்படி எத்தனை பள்ளிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?

கல்வி கட்டண நிர்ணயக்குழு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் 7 பேர் கொண்ட குழு தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, இருப்பிடம், செலவு, வருமானம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு 3 வருடங்களுக்கு ஒருமுறை கட்டணத்தை நிர்ணயிக்கிறது. இக்குழு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மீறி வசூலிப்பது தொடர்பான புகார்களை விசாரிக்கும் அதிகாரம் பெற்று உள்ளது. விதிமீறல்கள் இருப்பின் உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யும் தகுதி படைத்தது. இதுபோலவே மாவட்ட கல்வி அலுவலரை தலைமையாக கொண்ட குழு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.இருப்பினும் குறிப்பிட்ட குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்களா? என்ற கேள்விக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

கட்டண அறிவிப்பு உள்ள போதிலும் அதனை நடைமுறையில் அமல்படுத்தும் வகையில் இக்குழுக்கள் கல்வி நிறுவனங்கள் மீது திடீர் ஆய்வு, கணக்கு சரிபார்ப்பு, பெற்றோர் புகார் மீதான விசாரணை, ரசீது ஆய்வு, அங்கீகார எச்சரிக்கை மற்றும் கடுமையான நிர்வாக நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே கட்டணக்கொள்ளையை தடுக்க இயலும். கல்வி என்பது சேவை என்ற நிலைமாறி தனியார் பள்ளிகள் அதனை வணிகமயமாக்கியதின் மூலம் ஓநாய்கள் நடுவில் மாட்டிய ஆடுகளாய் பிள்ளைகள் சிக்கி தவிக்கின்றனர். பெற்றோர் பொருளாதார சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். எனவே விதி மட்டுமே இவர்களது விதியை மாற்றாது. அதனை நடைமுறைபடுத்தலும், தொடர் கண்காணிப்பும், அமலாக்கமும், கடும் நடவடிக்கையுமே இதற்கு தீர்வாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *