சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் குறைகளை களைந்திடும் நோக்கத்தில் பேரா.M.S.சுவாமிநாதன் தலைமையில் கடந்த 18.11.2004 அன்று தேசிய விவசாயிகள் ஆணையம் (NCF) மத்திய அரசால் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2004 டிசம்பர் முதல் 4.10.2006 வரை 5 அறிக்கைகளை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் மூலம் விவசாயிகளின் தற்கொலை, கடன்சுமை, நெருக்கடிகள் உள்ளிட்ட பிரச்னைகளை நிவர்த்தி செய்திட விவசாயிகளை மையப்படுத்திய தேசிய கொள்கை ஒன்றை உருவாக்க பரிந்துரை செய்தது.
விவசாய நிலங்களை பெருநிறுவனங்களுக்கு வழங்கக்கூடாது. பிரதான விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும். அனைத்து முக்கிய பயிர்களுக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்பட வேண்டும். நிலத்தடி நீர் மறுசார்ஜ், கிராமப்புற கடன் வசதி, விவசாய ஆபத்து நிதி, பின் அறுவடை இழப்புகளை குறைத்தல், ஒவ்வொரு மாநிலத்திலும் விவசாயப் பிரதிநிதிகள் அடங்கிய மாநில விவசாயிகள் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள தேசிய விவசாயிகள் ஆணையம் வலியுறுத்தியது.
இருப்பினும் தமிழ்நாட்டில் இதுவரை மாநில விவசாயிகள் ஆணையம் அமைக்கப்படவில்லை. மாறாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மாநில வேளாண் சந்தைப்படுத்தல் வாரியம், வேளாண் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுமம், உழவர் நல சேவை மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கான பயிர்காப்பீடு, உரச் சலுகை, உழவர்சந்தை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகளின் பிரச்னைகளை/தேவைகளை அறிந்து நிவர்த்தி செய்ய முடியாத சூழலே உள்ளது.
இதனை போக்கிடும் வகையில் மாநில விவசாயிகள் ஆணையம் அழைக்கப்பட்டால் விவசாயிகளின் வறட்சி, வெள்ள பாதிப்பு, கடன்சுமை. சந்தை விலை பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படும். மேலும் நில உரிமை, உற்பத்திச் செலவு, தற்கொலை தடுப்பு, பெண் விவசாயிகளின் உரிமை பாதுகாப்பு போன்றவை குறித்து உடனுக்குடன் முடிவு எடுக்க முடியும். மாநில அரசுக்கு விவசாயிகளின் குரலை தெரிவிப்பதோடு தேசிய அளவிலான பரிந்துரைகளை உள்ளூர் சூழலுக்கு ஏற்ப செயல்படுத்த இயலும்.
தேசிய குற்ற ஆவணக்காப்பக புள்ளிவிவரங்களின் படி தமிழ்நாட்டில் விவசாயிகளின் தற்கொலை நாட்டில் 2வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது. விவசாய கடன் பிரச்னை, பயிர் பாதிப்பு, நீர் பற்றாக்குறை, இயற்கை சீற்றத்தால் விவசாயம் இழப்பு உள்ளிட்ட பலகாரணங்களால் இந்நிலை தொடர்கதையாகவே உள்ளது. இதனை நிவர்த்தி செய்திடும் வகையில் விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் மாநில விவசாயிகள் ஆணையம் அமைக்கப்பட வேண்டியது அவசர அவசியமானதாகும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply