சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தமிழகத்தின் மகாபலிபுரத்திற்கு அடுத்ததாக முக்கிய சிற்ப கலை மையமாக திகழ்கிறது. இங்குள்ள கற்கள் தரம், கடினத்தன்மை மற்றும் ரேகை சாஸ்திரம் போன்ற தனித்துவமான பண்புகளால் சிலை மற்றும் சிற்பங்கள் வடிக்க சிறந்ததாக உள்ளது. இதனால் ஊத்துக்குளி, மொரட்டுபாளையம், பெரியபாளையம், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேல் பாரம்பரியமாக சிற்பத் தொழிலில் சிற்ப கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல அடி உயரம் வரை 11 டன் எடை வரையில் இங்கு சிலைகள் உருவாக்கப் படுகின்றன.இங்கு செய்யப்படும் சிலைகள் பல்வேறு மாநிலங்கள் மட்டுமில்லாமல் பல நாடுகளுக்கும் பயணிக்கின்றன.
இங்கு கற்கள் ஆண்கல், பெண்கல், நபூம்சக கல் (திருநங்கை கல்) என வகைப்படுத்தப்பட்டு எந்த வகை சிலைகள் வடிக்கப்பட வேண்டுமோ அதற்கேற்ப கல் தேர்வு செய்யப்படுகிறது. இதன் சுற்றுவட்டாரத்தில் 250க்கும் மேற்பட்ட கூடங்களில் இருந்து கற்கள் சிற்பிகளால் உயிர் பெற்று வந்தன. அங்கிருந்து வெளிவரும் உளியின் ஓசைகள் பிரபஞ்சத்தின் இசைகளாய் பிரதிபலித்தன. ஆனால் இன்றோ அவை எண்ணிக்கையில் 100 ஆக சுருங்கி போனதோடு இதனை நம்பி உள்ள சுமார் 25000 க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
ஊத்துக்குளி பகுதியில் கல் எடுக்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதால் கல்தட்டுப்பாடு காரணமாக முற்றிலுமாய் இத்தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கற்களின் விலை சதுர அடிக்கு ரூ 900 வரை விலை உயர்ந்து உள்ளதால் சிலையின் விலையும் உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. மேலும் தற்போது இவர்கள் பயன்படுத்தும் எந்திரங்களின் விலை உயர்வு, புதிய தலைமுறையினர் இத்தொழிலுக்கு வர ஆர்வம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் சிற்பத் தொழில் முடங்கி வருகிறது.
இத்தகைய குறைகளை களையவும், இப்பகுதியில் சிற்பத் தொழில் புத்துயிர் பெறவும் அரசு சிற்பத் தொழில் கிளஸ்டர் இங்கு ஏற்படுத்திட வேண்டும். இதனால் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் மேம்படும். சிற்ப கலைஞர்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்க வழிவகை செய்வதோடு உரிய எந்திரங்கள் வாங்க மானியம் அளித்திட வேண்டும். சிற்பத் தொழிலில் ஈடுபடுவோர் நலனிற்காக தனி வாரியம் அமைப்பதோடு இத்தொழிலாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கிட வேண்டும்.
தொழிலுக்கு ஆதாரமான கற்களை இவர்களுக்கு குவாரிகளை நிலையான முறையில் மீண்டும் திறந்து அனுமதிப்பதோடு நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாற்று ஏற்பாடுகளின் படி கல் கிடைக்கவும், போக்குவரத்து மானியம் வழங்கவும், புதிய தலைமுறையினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும், புவிசார் குறியீடு மூலம் தொழில் மேம்படவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழகத்தின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை, அதனை நம்பி வாழும் கலைஞர்களை காக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply