சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

இறால் பண்ணைகளால் கடலூர் அலையாத்தி காடுகளுக்கு ஆபத்து – சமூக பொதுநல இயக்கம் புகார்.

பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் மீது இறால் பண்ணைகளின் தாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அமைந்துள்ள மாங்குரோவ் (அலையாத்தி) காடுகள் சுமார் 4000 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது இந்தியாவின் இரண்டாவது பெரிய அலையாத்தி காடாக திகழ்வதோடு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் அடர்ந்து வளர்ந்த சுரபுன்னை(தில்லை) மரங்கள் புயல், சுனாமி, கடல் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக திகழ்வதோடு கார்பன் சேகரிப்பு, ஊட்டச்சத்து சுழற்சி, கடல் மாசை குறைப்பதில் பெரும்பங்காற்றி வருகின்றன. மேலும் மீன், நண்டு, இறால், சிப்பி கடல் ஆமை, பெலிகன், ஹெரான், ஈக்ரெட், ஸ்டார்க் உள்ளிட்ட பல்லுயிர் பெருக்கத்திற்கு தாயகமாகவும் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது.

காண்போரை வசீகரிக்கும் இப்பகுதி சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கபுரியாக உள்ளது. கடந்த 1990க்கு பின்னர் இங்கு இறால் பண்ணைகள் கால்பதித்து தற்போது அவற்றின் பிடியில் இத்தகைய அலையாத்தி காடுகள் சிக்கி அழிவினை சந்தித்து வருகின்றன. இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அதிக அளவு ஊட்டசத்துக்கள், உரங்கள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், பூச்சிகொல்லிகள் மற்றும் ரசாயனங்கள் அதிகமாக கொண்டு இருக்கும். இவை கால்வாய்கள் வழியாக அலையாத்தி காடுகளில் விடப்படுகிறது.

இக்கழிவுநீர் உப்பு தன்மை அதிகமாக கொண்டிருப்பதால் மரங்களின் வேர்கள் அழிகின்றன. நீரின் ஆக்சிஜன் குறைந்து மரங்கள் மற்றும் இங்கு வாழும் உயிரினங்கள் அடியோடு பாதிக்கப்படுகிறது. 1990களில் பறவை எண்ணிக்கை உச்சத்தில் இருந்தது. இறால் பண்ணைகள் அதிகரித்த பின் இதன் எண்ணிக்கை 23 இனங்களாக சுருங்கிப்போனது. இதுபோலவே பண்ணை இறால் இக்காட்டு நீர்நிலையில் பரவியதின் விளைவாக Catla, Sankara, Lactarius, Ambassis, Chanos உள்ளிட்ட பல்வேறு இன மீன்கள் அழிந்து போயின.

கடலில் இருந்து பல்வேறு மீன் இனங்கள் கடலோர சதுப்பு நிலக்காடுகளில் வந்து முட்டையிட வரும். தற்போது இவற்றின் வரத்து பெருமளவில் குறைந்து போனது. இக்காட்டின் சூழல் பாதிக்கப்படுவதோடு மாசையும் ஏற்படுத்துவதால் பல்லுயிர் பெருக்கம் குறைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. பண்ணைகளுக்காக காடுகளுக்குள் செயற்கை கால்வாய் வெட்டப்படுவதால் இயற்கை நீர் ஓட்டம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இங்கு சட்டவிரோதமாக கடலோர வளர்ச்சி ஆணையத்தில் (CAA) பதிவு செய்யப்படாத ஏராளமான பண்ணைகள் செயல்படுவதோடு அவைகளால் அலையாத்தி காடுகள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக அலையாத்தி காடுகளின் பரப்பளவு அதிகரித்து உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவித்த போதும் அதிகரித்து உள்ள இறால் பண்ணைகளின் செயல்பாடுகளால் பிச்சாவரம் அலையாத்தி காடுகள் ஆபத்தினை எதிர்நோக்கி உள்ளன. எனவே இதன் முக்கியத்துவத்தை கருதி அதனை காக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகும். கடலோர ஒழுங்குமுறை விதிகள் (CRZ) சுற்றுசூழல் சட்டங்கள் படி செயல்படாத பண்ணைகள் மீது தகுந்த நடவடிக்கை மற்றும் கழிவுநீர் காடுகளில் விடுவது தடுப்பது, ஒழுங்குமுறை கட்டுப்பாடு, காடுகள் மீட்டுருவாக்கம் உள்ளிட்டவை துரிதகதியில் செயல்படுத்தப்பட வேண்டும்.

coastal ecosystem damage tamilnadu
mangrove destruction india
இறால் பண்ணை பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *