சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மத்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மறவபாளையம், நாமக்கல் மாவட்டம் சிட்டம் புண்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்டப் பகுதிகளில் அரியவகை கனிமமான பிளாட்டினம் இருப்பது கண்டு அறியப்பட்டு உள்ளது. தங்கத்தை விட பலமடங்கு மதிப்பு வாய்ந்த பிளாட்டினம் ஆறு அரிய உலோகங்களை கொண்ட ஆஸ்மியம், இரிடியம், ருத்தேனியம், ரோடியம், பல்லேடியம் ஆகியவற்றின் தொகுப்பாக இருக்கும்.
வெள்ளைத் தங்கம் என செல்லமாக அழைக்கப்படும் இக்கனிமம் ஆய்வக உபகரணங்கள், மின்சாதன தொடர்புகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு, ரசாயன வினையூக்கிகள், பேஸ்மேக்கர் உள்ளிட்ட மருத்துவ கருவிகள், கண்ணாடி மற்றும் ரசாயன உற்பத்தியில் பெரும்பங்கு ஆற்றுகின்றன. தென்னாப்பிரிக்கா சுரங்கங்களே உலக தேவையினை நிவர்த்தி செய்து வருகிறது.
இத்தகைய பிளாட்டின சுரங்கங்கள் அமைக்கப்படும் போது பதனீட்டு செயல்முறைகளால் அமில நீர் பெரும ளவில் வெளியேற்றப்படும். இது ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் பிளாட்டினம், குரோமியம், நிக்கல், தாமிரம் போன்ற உலோகங்கள் கலக்கிறது. இதனால் நீர்வாழ் உயிரினங்கள் மட்டுமில்லாது தாவரங்கள், மனிதர்களும் பாதிப்பிற்கு உள்ளாக நேரிடுகின்றது. சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீர் பாதிப்பு, விவசாயம் பாதிப்பு, நீர் பற்றாக்குறை ஏற்பட காரணமாகிறது.
இப்பகுதியில் வாழும் மக்களுக்கு சிலிகோசிஸ். சுவாச நோய்கள், நுரையீரல் பாதிப்புகள், சிறுநீரகம், குடல், எலும்பு மஜ்ஜை பாதிப்புகள் ஏற்படுவதோடு டி.என்.ஏ மாற்றம் மற்றும் புற்றுநோய் உருவாகவும் இடம் அளிக்கிறது. சுரங்க நிறுவனங்கள் பெரும் லாபம் சம்பாதிக்கும் நிலையில் அதனால் கிராம மக்கள் தங்கள் வாழ்வை, உடல்நலத்தை, விவசாய நிலத்தை, இயற்கை வளத்தை இழக்கும் அபாயமே எதிர்நோக்கி உள்ளோம்.
பொதுவாக கனிமவள சுரங்கங்கள் அமைக்கும் செயல்பாடு G4 (கண்டுபிடிப்பு) G3 (விரிவான ஆய்வு). G2 (ஏலம்) G1 (சுரங்க இயக்கம்) என்னும் நிலைகளில் செயல்படுத்தப்படும். திருப்பூர்-மறவபாளையத்தில் 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பிளாட்டின சுரங்கம் மேற்கொள்ளும் பணி G4 மற்றும் G3 என்னும் நிலையில் உள்ளது. டங்ஸ்டன் மற்றும் மாலிப்டின சுரங்கங்களைப் போல மத்திய அரசு மேற்கொள்ளும் இம்முயற்சியால் சுற்றுசூழல், விவசாயம், நிலப்பயன்பாடு, மக்கள் உடல்நலன், வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படும் என்பதால் குறிப்பிட்ட திட்டத்தினை நிறைவேற்றும் பணிகளை நிறுத்திட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply