சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைப்பகுதியில் இல்மனைட், டைட்டானியம், ரூட்டைல், ஜிர்கான், கார்னெட், மோனசைட், தோரியம், சில்மனைட் உள்ளிட்ட அரியவகை கனிமங்கள் உள்ளன. இவற்றை ஆண்டுக்கு சுமார் 9 லட்சம் டன் வரையில் பிரித்தெடுக்கும் வகையில் இந்திய அணுசக்திதுறையின்(DAE) கீழ் IREL (Indian Rare Earths Limited) எனும் நிறுவனம் மணவாளக்குறிச்சி பகுதியில் 1963ல் தொடங்கப்பட்டு 1970 முதல் செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நிறுவன செயல்பாடுகளால் கதிர்வீச்சு காரணமாக கடற்கரை கிராமங்களில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து பலர் இறந்து போயினர்.
மேலும் கடல் அரிப்பு, மீன்பிடி பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, தோல் நோய், இருதய நோய், நுரையிரல் தொடர்பான பாதிப்புகளுக்கு மக்கள் உள்ளாகினர். இந்நிலையில் கிள்ளியூர் தாலுகா கீழ் மிடாலம், மிடாலம், இணையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1144 ஹெக்டேர் நிலங்களை எடுத்து அணுக்கனிம சுரங்க திட்டத்தினை விரிவு படுத்திட மத்திய அரசு முடிவு எடுத்தது. இதன்படி ஆண்டுக்கு 1.5 மிலலியன் டன் அளவுக்கு கனிமங்கள் எடுக்கவும் 40 ஆண்டுகளில் 59.88 மில்லியன் டன் கனிமங்கள் எடுக்கவும் திட்டமிட்டது.
இதற்கென 2015ல் தமிழக அரசு ஒப்புதல் அளித்த நிலையில் 2021ல் மத்திய சுரங்க அமைச்சகம் இடத்தினை ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து 1.10.2024 அன்று தக்கலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் கருத்து கேட்புக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அணுக்கனிமம் அகழ்ந்தெடுக்க ப்படுவதால் தங்கள் ஆரோக்கியம், விவசாயம், கடல்வளம், சுற்றுச்சூழல் முழுமையாக பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்திற்கு மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்ததால் கூட்டம் ரத்தானது.
இதையடுத்து 2025 ஜூலை மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அரியவகை கனிம சுரங்கங்கள் அகழ்ந்தெடுக்கும் பணிக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமலே பணிகளை மேற்கொள்ளலாம் என்ற முடிவினை எடுத்து உள்ளது. இதனால் தமிழக கடற்கரை மட்டுமில்லாது ஏனைய பகுதிகளிலும் கனிம சுரங்கங்கள் அமைக்க பொதுமக்களின் அனுமதி தேவையில்லை என்னும் மக்கள் விரோத போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது. இதுபோல் அணுசக்தி துறையை தனியாருக்கு மத்திய அரசு தாரைவார்த்து உள்ளது.
இதனால் தமிழக கடற்கரையை சுரண்டி அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் எடுத்து அணுமின் நிலையம் செயல்படுத்திட மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழலும், கடல்வளமும், மக்கள் நலனும் அடியோடு பாதிக்கும் ஆபத்து நெருங்கி வருகிறது. இத் திட்டத்தினை நிறைவேற்றிடும் வகையில் கடற்கரை ஒழுங்காற்று மண்டலத்திடம் IREL நிறுவனம் அனுமதி கேட்டு உள்ளது. இத்திட்டதினை நிறைவேற்றிட கூடாது என குமரி மாவட்ட மக்களும், தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்த போதும் அதனை கண்டு கொள்ளாமல் அணுக்கனிம சுரங்க திட்டத்தினை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். கார்பரேட் நலனை கருத்தில் கொள்ளாமல் மக்கள் நலனை கவனத்தில் கொண்டு இத்திட்டத்தினை மத்திய அரசு கைவிட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply