சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழ்நாட்டின் சிமெண்ட் நகரம் என அழைக்கப்படும் அரியலூர் மாவட்டப் பகுதிகளில் சுண்ணாம்பு படிவப் பகுதிகள் காணப்படுவதால் இங்கு பல்வேறு சிமெண்ட் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றிற்கு தேவையான சுண்ணாம்பு கற்கள் இங்குள்ள விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி சுரங்கங்கள் தோண்டி கற்களை எடுக்கின்றனர். இதன்மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் இத்தகைய சுரங்கங்களால் காற்று, நீர், மண் மற்றும் சுகாதாரம், விவசாயம் இழப்புகளை எதிர்கொள்வதால் இப்பகுதி கிராம மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
சுரங்கங்கள் மற்றும் ஆலைகளில் இருந்து வரும் தூசு காற்றை மாசுபடுத்துவதோடு இப்பகுதியில் மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்ட விவசாய பயிர்கள் மீது படிந்து ஒளிச்சேர்க்கை அளவை தடுக்கிறது. இதனால் மகசூல் வெகுவாக வீழ்ச்சி அடைவதால் விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகுதியின் பசுமை பரப்பு 30% வரை குறைந்து வெப்ப அளவு 9% வரை அதிகரித்து உள்ளது.சுரங்கங்கள் அதிக ஆழத்திற்கு தோண்டப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைகிறது. பல ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் சுரங்கங்களாக மாறி உள்ள நிலையில் ஏற்கனவே அளித்த வாக்குறுதிகள் படி அவர்களுக்கு வேலைவாய்ப்பு, மருத்துவமனை, பள்ளி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளே இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தூசு மற்றும் கனிமங்கள் நீரில் கலந்து அதன் கடினத்தன்மை அதிகரிப்பதால் இதனை பயன்படுத்துவோருக்கு வயிறு, நுரையிரல், சிறுநீரகம், தோல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிப்பு அடையும் நிலை உள்ளது. மண்வளம் பாதிக்கப்படுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படுகிறது. தூசுகளால் ஏற்படும் மாசை தவிர்க்க ESP / Bag House/ Fog cannons/ Wet Seppression/ ZLD / Green Belt உள்ளிட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என சுற்றுசூழல் சட்டங்கள் சொல்கிறது. இருப்பினும் அதனை கடைபிடிக்காததோடு பல நிறுவனங்கள் EC (Environmental Clearance) இல்லாமல் நடத்தப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தூசும், மாசும் தவிர்க்க இயலாமல் மக்களை தவிக்க விடுகின்றன.
கடந்த 1993 ல் புதுப்பாளையம் உள்ளிட்ட 5 கிராமங்களில் சுமார் 1400 ஏக்கர் நிலம் சுண்ணாம்பு சுரங்கத்திற்கு என அரசே கையகப்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 25 ஆயிரம் மட்டுமே வழங்கிய நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீட்டிற்காக நீதிமன்றம் செல்லும் நிலையே உருவானது. இதுபோலவே உரிய இழப்பீடு வழங்கபடாமல் தங்கள் நிலத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து பல விவசாயிகள் இங்கு தவித்து வருகின்றனர். இவர்களுக்கான இழப்பீடு வழங்கிய பின் புதிய சுரங்க அனுமதி வழங்க வேண்டும் என்ற இவர்களது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டே வருகிறது.
கைவிடப்பட்ட நிலையில் உள்ள பல்வேறு சுரங்கங்கள் பல ஆண்டுகாலமாக மூடப்படாத நிலையில் அவை மக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்தானவைகளாக உள்ளன. 300 அடிக்கும் அதிகமாக ஆழமாக உள்ள இச்சுரங்கங்களால் இப்பகுதியில் மண் அரிப்பு, நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை நீர்நிலைகள் அல்லது மீட்டுருவாக்கம் செய்து காப்புக்காடுகள், விவசாய நிலங்களாக மாற்றலாம். ஆனால் நிறுவனங்கள் இதற்கான பணிகளை செயல்படுத்தாததால் இப்பகுதி பாலைப் பள்ளதாக்குகளாய் காட்சி அளிக்கின்றன. எனவே அரியலூர் மற்றும் பெரம்பலூர் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15 லட்சம் மக்கள் நலன்கருதி விவசாயிகளின் பாதிப்புகளுக்கு தீர்வு ஏற்படவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், சட்டவிரோதமாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அரசு அதிக அக்கறை காட்ட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply