சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழகத்தில் 55 வயதிற்கு மேற்பட்டோர் சுமார் 1 கோடிக்கு மேல் உள்ளனர். 2031க்குள் முதியோர் விகிதம் 18.2% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கேரளாவிற்கு அடுத்ததாக தமிழகம் முதியோர் எண்ணிக்கை அதிகம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களது நலன் மற்றும் பாதுகாப்பு அவசியமாகிறது. வயதான சூழலில் ஆதரவற்ற, வீடற்ற, குடும்பத்தால் கைவிடப்படும் நிலைக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஆதரவற்ற முதியோருக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை சுமார் 34.36 லட்சம் பேருக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. பெற்றோர் மற்றும் மூத்தகுடி மக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம். 2007 பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை என்கிறது.. இருப்பினும் ஏராளமான முதியோர் புறக்கணிப்பை எதிர்கொள்வதால் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆதரவற்ற நிலையில் வாழும் முதியோர்களை காக்க என இதுவரையில் அரசு சார்பில் முதியோர் இல்லங்கள் தொடங்கப்படவில்லை. தமிழகத்தில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் முதியோர் இல்லங்களுக்கு என 28 இல்லங்களில் வசிக்கும் முதியோருக்கு மாதம் ரூ 1200 உணவு மானியமாக வழங்கி வருகிறது. ஏனைய இல்லங்கள் தொண்டுநிறுவனங்களால் மக்கள் அளிக்கும் ஆதரவால் முதியோருக்கு உதவிகரம் அளித்து வருகிறது.
2025-26 பட்ஜெட்டில் தமிழக அரசு அன்பு சோலை என்னும் பெயரில் 25 பகல்நேர முதியோர் காப்பகம் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப் போவதாய் அறிவித்தது. இதன்படி ஒருசில பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பெருகிவரும் தேவைக்கு இதனால் பூர்த்தி செய்ய முடியாத நிலையே உள்ளதால் ஏராளமான முதியோர் இன்னும் அடிப்படை தேவைகளுக்கே அவதிப்படும் சூழலில் வாழ்வை நகர்த்துகின்றனர்.
வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மாதம்தோறும் குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி மூத்தகுடி மக்கள் உறைவிடத்தில் இருக்க இயலும். ஆனால் ஏழ்மை நிலையில் புறக்கணிப்புக்கு உள்ளானவர்கள் வாழ்க்கையோடு போராட வேண்டிய அவலநிலையிலேயே உள்ளனர். இந்தியாவின் சமூக நலன் மற்றும் முதியோர் பாதுகாப்பு சட்டம் 2007 (Maintenance and welfare of parents and Senior citizens Act 2007) பிரிவு 19ன்படி மாநில அரசுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு முதியோர் இல்லம் நிறுவி பராமரிக்க வேண்டும் என்கிறது. இதனையே மதுரை உயர்நீதிமன்றமும் வலியுறுத்தி உள்ளது.மூத்த குடிமக்கள் நாட்டிற்கு சாபமல்ல.. வரம் என்பதை உணர்ந்து அவர்களது உரிமைகளை, வாழ்வை, பாதுகாப்பை உறுதிபடுத்திட மாவட்டங்களில் முதியோர் காப்பகங்கள் அரசே அமைக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply