கூம்புவடிவ ஒலிபெருக்கி ஒலியை அதிக தூரத்திற்கு எறியும் தன்மை கொண்டது. ஒலி கூர்மையாகவும், கட்டுப்பாடு இல்லாமல் பரவுவதால் சுற்றுப்பகுதி முழுவதும் ஒலி மாசு ஏற்படுகிறது. தமிழகத்தில் ஒலி மாசு தடுப்பு விதிமுறைகளின்படி கடந்த 2000ம் ஆண்டு முதல் கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த தடை உள்ளது. 2018ல் மதுரை உயர்நீதிமன்றமும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் இயக்க தடை விதித்து உள்ளது. இதன்படி வழிபாட்டு தலங்கள்,கோவில் விழாக்கள், அரசியல் கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறும் பட்சத்தில் பறிமுதல், அபராதம், மின்சாரம் துண்டிப்பு, 3 மாதம் வரை சிறை தண்டனை என நடவடிக்கை எடுக்கலாம்.
தற்போது காவல்துறைக்கு டிமிக்கி கொடுக்கும் வகையில் பெட்டிகளில் அதிக ஒலி எழுப்பும் வகையில் ஒலிபெருக்கிகளை அமைத்தும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அதிக சத்தம் காரணமாக செவித்திறன் பாதிப்பு, உடல்நல பாதிப்பு உள்ளவர்கள், இதயநோய் மற்றும் இரத்த அழுத்த பாதிப்பு கொண்டவர்கள் பாதிக்கப்படுவதோடு மன அழுத்தம், தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை, மன உளைச்சல் என பல பாதிப்புகளுக்கு காரணமாகிறது. மேலும் மாணவர்களின் கல்வியில் கவனம் செலுத்த முடியாததுடன் பறவைகளின் இயல்பு வாழ்க்கை உள்ளிட்ட சுற்றுசூழலும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
குமரி மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டு கூம்புவடிவ ஒலிபெருக்கி அமைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்து இருந்தது. இருப்பினும்
இத்தடைகள் எதனையும் பொருட்படுத்தாமல் தங்குதடையின்றி பொது மற்றும் கோவில் நிகழ்வுகளில் இத்தகைய அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் அமைக்கப்படுவது சர்வசாதாரணமாகிப் போனது. இதனால் முதியோர், உடல் பலவீனம் உள்ளர்கள், குழந்தைகள், பெண்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பினரும் கடும்பாதிப்பிற்கு உள்ளாகும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.
பொதுமக்கள் அதிகமாக புழங்கும் இடங்கள், சாலைப்பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்படும் ஒலிபெருக்கிகளால் மக்கள் உடல் மற்றும் மனரீதியாக பல்வேறு உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். இரவு காலங்களிலும் அதிக ஒலி எழுப்புவதால் மக்கள் நிம்மதியாக உறங்க கூட இயல்வதில்லை.
அதிக டெசிபல் சத்தத்தை உருவாக்கிடும் வகையில் ஒலி கருவிகளை பெட்டிகளில் பொருத்தி ஒரே இடத்தில் இவற்றை அடுக்கி வைத்து இயக்குகின்றனர். இதனால் பொது அமைதி சீர்குலைவதோடு ஒலி மாசு ஏற்பட்டு அனைத்து தரப்பினரையும் பாதிப்பிற்கு உள்ளாக்கி வருகிறது. எனவே ஒலி மாசுபாடு ஏற்படுவதை தடுக்க கூம்புவடிவ ஒலிபெருக்கியினை அமைத்து இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல்ஹமீது, தென்மண்டலச் செயலாளர் ஞாலம் T.ஜெகதீஷ், குமரி கோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணிசெயலாளர் C.V.முருகன், தகவல் மற்றும் தொழில்நுட்ப அணி செயலாளர் E.சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply