சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மலைகளின் இளவரசியாக திகழும் கொடைக்கானல் சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. ஆனால் சுற்றுச்சூழலை குறித்து கவலை கொள்ளாமல் செயல்பட்ட ஒரு ஆலையால் இப்பகுதி மக்களுக்கு இது நரக பூமியாக மாறி உள்ளது. அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பாதரசத்தை மூலப்பொருளாக கொண்டு வெப்பமானிகள் (தெர்மா மீட்டர்) தயாரிக்கும் தொழிற்சாலையினை ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் கொடைக்கானலில் 1980ல் தொடங்கியது. உடைந்த வெப்பமானிகள் மற்றும் பாதரச கழிவுகளை இந்நிறுவனம் அருகில் உள்ள வனப்பகுதியில் கொட்டியது. இதனால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டதுடன் இப்பகுதி மக்களுக்கு சிறுநீரக செயல் இழப்பு, நரம்பு பாதிப்பு, சுவாச பிரச்னைகள், தோல் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டதோடு பலர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இப்பாதிப்புகளை உணர்ந்த இப்பகுதி மக்கள் இதற்கு எதிராக போராட்டத்தில் இறங்கி எதிர்ப்புகளை தெரிவித்ததை தொடர்ந்து கடந்த 2001ல் ஆலை மூடப்பட்டது. இருப்பினும் நிலம்,நீர், காற்று, உயிரினங்கள் பாதிப்பு என நிவர்த்தி செய்ய முடியாமல் நீடித்து வருகிறது. இந்தியாவில் 35 கடுமையாக மாசு பாதிக்கப்பட்ட இடங்களில் கொடைக்கானல் பிரதான பகுதியாக திகழ்கிறது. 2003ல் ஆலை வளாகத்தில் இருந்த பாதரச கழிவுகள் அமெரிக்காவுக்கு அனுப்பியதாக ஆலை நிர்வாகம் கூறுகிறது. 2016 ல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கியது.இருந்த போதிலும் முழுமையாக ஆலை கழிவுகளை அகற்றுவதில் பின்னடைவே உள்ளது.
2016ல் அணு ஆற்றல் துறை நடத்திய ஆய்வில் பாதரச அளவு அமெரிக்க சுற்றுசூழல் தரநிலையை விட 11 மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. 2024 ல் NEERI (National Environmental Engineering Research Institute) விஞ்ஞானிகள் உதவியுடன் விஷமான கழிவுகளை அகற்ற முயன்றனர். இருப்பினும் இப்பணி சவாலாகவே உள்ளது. இந்த ஆலையின் கழிவுகள் வனப்பகுதி மற்றும் நீர்நிலைகளில் பரவி பல்வேறு வகைகளில் பாதிப்புகளை மக்களுக்கு பரிசு அளித்தவாறு உள்ளது.
இப்பகுதியில் உள்ள மீன்களை ஆய்வு செய்ததில் இத்தகைய பாதிப்புகள் தொடர்வது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.பாதரசக் கழிவுகளை அகற்ற உரிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் இவற்றை முழுமையாக அகற்றும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகின்றன. 21 ஆண்டுகள் செயல்பட்ட போதிலும் குறிப்பிட்ட ஆலை நடத்திய சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இன்னும் பல தலைமுறைகள் பாதிக்கப்படும் நிலையே தொடர்கிறது.
வெளிநாடுகளில் சுற்றுச்சூழல் காக்கும் வகையில் உரிய கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்படும் நிலை உள்ளது. ஆனால் நம் நாட்டிலோ அதனை பொருட்படுத்தாத நிலையில் பல்வேறு பாதிப்புகள் அடைந்த பின்பே இதன் தீவிரத்தை உணர்கிறோம். இருந்தும் இதில் இருந்து படிப்பினைகளை கற்றுக் கொள்ளாமல் ஆட்சியாளர்கள் சுற்றுசூழல் விஷயத்தில் அலட்சியம் காட்டி வருவது ஆபத்திற்கு நாமே ஆரத்தி எடுப்பதாகும். கொடைக்கானல் பகுதியின் சுற்றுசூழலையும், மக்கள் நலனையும் காத்திடும் வகையில் இப்பகுதியில் எஞ்சி உள்ள கழிவுகளை அகற்றுவதில் தீவிரம் காட்ட வேண்டும். மேலும் இதுதொடர்பாக உண்மை நிலவரங்களை மக்களுக்கு தமிழக அரசு தெரிவித்திட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply