சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

குமரி மாவட்டத்தில் விலைநிலங்கள் ஆக மாறிய விளைநிலங்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தில் மண் நிரப்பப்பட்டு வீட்டு மனைகளாக மாற்றப்படும் விவசாய நிலங்கள்

குமரி மாவட்டம் 5 வகையான நிலங்களைக் கொண்டதோடு 21 வகை வனங்கள், யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க பட்ட மேற்கு தொடர்ச்சி மலை, இவைகளில் இருந்து உருவாகும் பல்வேறு ஆறுகள், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள், இவற்றில் இருந்து பாசனம் பெறும் குளங்கள், பச்சை பட்டாடை உடுத்திய வயல்வெளிகள், இரு பருவமழை, இதனால் நீர் வளம் என இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக காட்சி அளிப்பதாகும்.

நீர் நிலைகள் மற்றும் விளை நிலங்கள் குறைந்து வரும் நிலையில் இங்கு 1லட்சத்து 37ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இது 2000 ஆண்டிற்கு பின் வீட்டு மனைகளின் தாக்கம் காரணமாக 2010ல் 10 ஆயிரம் ஹெக்டேரிலும், தற்போது 5 ஆயிரம் ஹெக்டேரிலும் என நெல் விவசாயம் குறைந்து வருகிறது. அது போல் விளைபொருட்களின் ரகங்களும் அரிதாகி வருகிறது. மாவட்டத்தில் 64 வகை நெல் ரகங்கள் பயிரிடப்பட்டது தற்போது 6 ரகங்களாக மிஞ்சியது. அது போல் 350 மா ரகங்கள், 300 பலா மர ரகங்கள், 45 வகை வாழை ரகங்கள் இருந்ததில் தற்போது சில ரகங்கள் மட்டுமே எஞ்சியது.

வயல்கள் போன்ற விளை நிலங்கள் வீட்டு மனைகள் ஆக்க வேண்டும் என்றால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை நீர்வர வழியின்றி தரிசாக இருக்க வேண்டும். ஆனால் நீர்வரத்து உள்ள பகுதிகளை தரிசாக விட்டு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஆசியோடு விட்டு மனைகள் ஆக்கப்படுகிறது. சுசீந்திரம், பீமநகரி, ஆளுர், மருங்கூர், தேரூர், தாழாக்குடி, வீரநாராயணமங்கலம்,

புத்தேரி என பல்வேறு பகுதிகளிலும் வெகு வேகமாக விவசாய விளை நிலங்கள் மண் நிரப்பபட்டு வீட்டு மனைகள் ஆக்கப் படுகிறது. நகரமைப்பு ஊரக அமைப்பின் அனுமதி விளை நிலங்கள் கபளீகரம் செய்வதை மேலும் தீவிர படுத்துவதாக உள்ளது.

வயல்களை பாதுகாக்கவும், பாரம்பரியம் மிக்க மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்கும் வகையில் காக்கா (ஹில்ஸ் கன்சர்வேஷன் அத்தாரிட்டி) வில்லேஜ் பட்டியல் இடப்பட்டு உள்ளன. இதன்படி இங்கு வீட்டு மனைகள் அமைக்க வருவாய் துறை வேளாண் பொறியியல் துறை, வனத்துறை, பொதுப்பணித் துறைகளிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். இதிலும் அனைத்து துறை அதிகாரிகளையும் கவனித்து விதிகளை மீறி அனுமதி பெற்று உயர் நீதிமன்ற தீர்ப்பு, அரசு உத்தரவுகளை மீறி காக்கா வில்லேஜ் மற்றும் ராம்சார் பாதுகாப்பு நிலமான பறவைகள் சரணாலய பகுதிகளில் பத்திர பதிவு செய்து விடுகின்றனர்.

இத்தகைய நிலம் விழுங்கி மகாதேவன்களால் நீர்வரத்து மற்றும் பாசன கால்வாய்கள், நீர் ஆதாரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் அடியோடு அழிவதோடு, நிலத்தடி நீர் மட்டமும் அகல பாதாளத்திற்கு சென்று குடிநீர் தட்டுப்பாடு உருவாவதோடு, நிலத்தடி நீர் உப்பாக மாறும் பரிதாப நிலையினை மாவட்டம் சந்தித்து வருகிறது.திருவிதாங்கூர் நாட்டின் நெல் களஞ்சியமாக திகழ்ந்த கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாஞ்சில் நாடு என பெயர் பெற்றது. அதுவும் இனி பெயர் அளவில் மட்டுமே புழங்கும் சொல்லாகி போகும் சூழல் உள்ளது. இயற்கை வளம் பாதிக்கப்பட்டு வருவதால் குமரியில் இயல்பை விட வெப்பநிலை அதிகரித்து வருகிறது. வட துருவத்தில் இருந்து குமரிக்கு வருகை தரும் வெளிநாட்டு பறவைகளின் வருகையும் வெகுவாய் குறைந்து போனது.

இயற்கையினை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழிக்கும் என்பதை கடந்த மழை வெள்ள பெருக்கில் உணர்ந்த போதும் விளை நிலங்களை அழிப்பது பெரும் பாதிப்பினையே தரும். கர்நாடகாவில் விவசாயம் செய்ய இயலாத நிலத்தை அரசே கையகப் படுத்தி வேறு விவசாயிக்கு வழங்கும் சட்டம் அமலில் உள்ளது. கேரளாவில் நெல் விவசாய நிலங்களில் வணிக நோக்கத்தில் கை வைக்க முடியாது. குமரி மாவட்டத்தினை பசுமை மாவட்டம் ஆக்குவோம் என்பதை சொல் அளவில் இல்லாது அழிவின் விளிம்பில் மிஞ்சி உள்ள வயல்களை, நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். எனவே டெல்டா பகுதியைப் போல பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரி கோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, பொருளாளர் S. மைக்கேல்ராஜ், துணை செயலாளர் R. சாராபாய், விவசாய அணிச் செயலாளர் L. வேதக் கண், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் E சுரேஷ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் C.V.முருகன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

குமரி மாவட்ட விவசாய நிலங்கள், நாஞ்சில் நாடு விவசாயம், விளைநிலங்கள் வீட்டு மனைகள்
குமரி விவசாயம் பாதிப்பு, கன்னியாகுமரி சுற்றுச்சூழல் பிரச்சனை, மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *