சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கிருஷ்ணகிரியில் இருந்து தினசரி 1 லட்சம் டன் கனிமங்கள் கர்நாடகாவுக்கு கடத்தல் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிம வள சுரங்கம் மற்றும் மலை அழிப்பு

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஒட்டி உள்ளதால் கனிமவளங்கள் (குறிப்பாக கிரானைட், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட், கல் போன்றவை) சட்டவிரோதமாக கொள்ளை அடிப்பதற்கு ஏற்ற இடமாக மாறி விட்டது. இம்மாவட்டத்தில் உள்ள கருப்பு நிற கிரானைட் உலக அளவில் பிரபலமானது. இது கொள்ளையின் முக்கிய இலக்காக உள்ளது. நாள்தோறும் 6000 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் 1 லட்சம் டன் கனிமவளங்கள் கடத்தப்படுகிறது. இதில் 90% கர்நாடகாவிற்கு செல்கிறது. கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், வேப்பனஹள்ளி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கேலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் 110 கிரானைட் குவாரிகள் மற்றும் 360 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இவற்றின் பெரும்பாலானவை சுற்றுசூழல் அனுமதி இன்றி சட்டவிரோதமாக செயல்படுபவை.

2022ல் கோவில் நிலங்களில் 1000 கோடி மதிப்பிலான கனிமங்கள் கொள்ளை அடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 2024 ஆகஸ்ட் 28 அன்று ஒரே நாளில் 4 காவல்நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அரசு மற்றும் பட்டா நிலங்களில் கொள்ளை அடிக்கப்பட்ட 198.65 கோடி மதிப்பிலான கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 9 பேர் கைது செய்யப்பட்டனர். 2024- 25ல் 498 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவெல்லாம் யானை பசிக்கு சோளப்பொறி என்பது போல நடைபெற்ற நடவடிக்கை நாடகங்கள். தேசிய பசுமை தீர்ப்பாயம், உயர்நீதிமன்றம் பலமுறை கண்டித்த போதும் கண்டுகொள்ளாத மலை விழுங்கி மகாதேவன்களால் கொள்ளைகள் தொடர்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மலைகள் கபளீகரம் செய்யப்படுவதால் கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், தளி உள்ளிட்ட பகுதிகளில் மலைகள் தொலைந்து பள்ளங்களாய் காட்சி அளிக்கிறது. சராசரி மழை அளவு 2010ல் 800 மி.மீ இருந்து 2024ல் 650மி.மீக்கு குறைந்து உள்ளது. இது வெப்பமான காலநிலையை அதிகரித்து வெப்பநிலை 2-3°செல்சியஸ் அளவு உயர்ந்து உள்ளது. வெடிமருந்துகள், சுரங்க இயந்திரங்கள், வாகனங்கள் மூலம் வெளியாகும் தூசி ஆஸ்துமா, சுவாச பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு உடல் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மேலும் இதனால் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிலிகோஸிஸ் என்ற நோயால் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

யானைகள், மான், பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகிறது. உணவு மற்றும் நீர் ஆதாரங்கள் குறைவதால் யானைகள் கிராமங்களில் நுழைகின்றன. இதனால் மனித-வன விலங்கு மோதல் அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் யானை தாக்குதலால் பலர் உயிர் இழந்து உள்ளனர்.கனிம சுரங்கங்களால் பல்வேறு அரியவகை உயிரினங்கள் 25% அழிந்து உள்ளன. இது உணவு சங்கிலி சீர்குலைவுக்கு வழிவகுக்கிறது. தமிழ்நாட்டில் சட்டவிரோத சுரங்கம் மூலம் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வனபகுதி அழிந்து உள்ளது. இதில் கிருஷ்ணகிரி பெரும்பங்கு வகிக்கிறது.

மாவட்டத்தில் தொடரும் கனிம வளக் கொள்ளையால் நிலச்சரிவு ஆபத்து அதிகரித்து உள்ளதோடு, மழைகாலங்களில் மண் அரிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படுவதால் வறட்சி ஏற்பட்டு விவசாயம் அடியோடு அழியும் அவலமே உள்ளது. தூசிகள் படிவதால் இப்பகுதியில் 50% வரை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ள சூழலில் மலை அழிப்பால் மழை சுழற்சி முற்றிலுமாய் பாதிக்கப்பட்டு பசுமை மாவட்டமான கிருஷ்ணகிரி பாலைவன பகுதியாக மாறும் பரிதாப நிலையே உள்ளது. இருந்தும் கனிமவளக் கொள்ளையினை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்காததாலும், அரசியல் வாதிகளின் பின்புலத்தில் அதிகாரிகளின் ஆதரவோடு குவாரிகள் செயல்படும் நிலையில் சுற்றுசூழல் வெகுவேகமாக கிருஷ்ணகிரியில் அழிந்து வருகிறது. இனி ஊர் பெயரில் மட்டுமே கிரி இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *