சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கழிவுநீர் கலப்பால் உயிர் இழந்து வரும் பவானி ஆறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் கழிவுநீர் கலப்பால் பவானி ஆறு மாசுபடும் நிலை

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

நீலகிரி மலைத்தொடரில் பில்லி மலைப் பகுதியில் உருவாகி மேற்கு நோக்கி ஓடி கேரளம் மாநிலத்திற்குள் பாய்ந்து பின்னர் கிழக்கு நோக்கி திரும்பி தமிழ்நாட்டிற்குள் கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக பாயும் தமிழகத்தின் இரண்டாவது நீளமான நதியே பவானி ஆறு. காவிரி ஆற்றின் மிகப்பெரிய துணை ஆறான இந்நதி 217 கி.மீ தூரம் பயணித்து பவானி நகருக்கு அருகே கூடுதுறை பகுதியில் காவிரியில் சங்கமிக்கிறது. சங்க இலக்கியங்களில் வானி என அழைக்கப்படும் இந்நதி பூவானி மருவி பவானி ஆனது.

இந்த ஆற்றில் மேல் பவானி அணை, கொடிவேரி அணை, பவானிசாகர் அணை, பில்லூர் அணை ஆகியவை கட்டப்பட்டு விவசாயத்திற்கு மிக முக்கிய பங்காற்றி வருகிறது. கொங்கு மண்டலப் பகுதியின் 90% நீர்பாசன தேவையினை இந்நதியே நிவர்த்தி செய்து வருகிறது. இங்கு அமைக்கப்பட்ட 17 க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் மூலமாக பல லட்சம் மக்களின் தாகத்தை இந்நதி தணித்து வருகிறது. நிலத்தடி நீர் ஆதாரத்திற்கும், மின்உற்பத்திக்கும் என பல்வேறு வகையிலும் பங்காற்றி வரும் வற்றாத ஜீவநதி என பெயர் பெற்ற பவானி தற்போது தனது ஜீவனை இழந்து அதனை நம்பி உள்ள ஜீவன்களுக்கு உதவ முடியாத நிலையில் உருமாற்றம் அடைந்து வருகிறாள்.

மேட்டுப்பாளையம், சிறுமுகை, பவானி போன்ற இடங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஆற்றில் விடப்படுகிறது. இதனால் ஆறு கழிவுநீர் சேறாக மாறிப்போனது. மேலும் கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலை கழிவுகள், சாயப் பட்டறைகள், துணி ஆலைகள் வெளியேற்றும் ரசாயன கழிவு நீர் பல வண்ணங்களில் பாய்ந்து ஆற்றை கடுமையான மாசுபாட்டிற்கு உள்ளாக்கி உள்ளது. அத்தோடு கழிவு குப்பைகள் கொட்டப்படுவதாலும், ஆகாய தாமரைகள் பரவலாலும் ஆறு அதன் தன்மையினை இழந்து போனது.

சுகாதாரத்துறை சோதனைகளில் மலக்கிருமிகளின் அளவு அதிகம் என நிரூபிக்கபட்ட நிலையில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீராக இதனை பயன்படுத்த தகுதியற்றதாக கூறி எச்சரிக்கை தெரிவிக்கும் அளவிற்கு ஆறு மாசுபட்டுப்போனது. இதனால் இந்நீரை பயன்படுத்துவோருக்கு தோல் நோய்கள், சிறுநீரக பிரச்னை, வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு வருவதோடு விவசாயமும், நிலத்தடி நீர்மட்டமும் அடியோடு பாதிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பவானி ஆறு இத்தகைய நிலையால் தனது வாழ்க்கை பயணத்தை முடிக்கும் நிலைக்கு உள்ளாகவில்லை. உள்ளாக்கி விட்டோம். கழிவுநீர் கலந்து அழிந்த நொய்யல் நதி போல பவானியும் ஆயுள் கைதி போல தனது அந்திம காலத்தை எதிர்நோக்கி காத்துகொண்டு இருக்கிறாள். இந்நிலையினை போக்கிட இந்நதியில் கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடை செய்வதோடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாக்கிடவும், மக்கள் கழிவு குப்பைகளை இங்கு கொட்டாமல் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், சட்டவிரோத ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடவும் செய்து பவானியினை மீட்க அதன் கரைகள் போல கிராமங்கள் கைகோர்த்திட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *