சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேற நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை பாதிக்கும் நீட் தேர்வை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை

நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகளைத் தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் மாணவர் போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்க முயன்றது. இருப்பினும் தளராமல் போராட்டத்தினை மாணவர்கள் தொடர்ந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியினை ராஜினாமா செய்து உள்ளார். மாணவர்களின் போராட்டத்திற்கு இது வெற்றியாக அமைந்த போதிலும் விளிம்பு நிலை மாணவர்களின் பிரச்னைக்கு நீட் தேர்வு முறையினை நீக்குவதற்கு மாறாக போராட்டத்தின் வீரியத்தை குறைக்க மத்திய அரசு நாடகமாடுகிறதோ என்ற சந்தேகமே எழுகிறது.

நீட் (NEET) தேர்வு 2017 முதல் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டது. மருத்துவ கல்வியில் ஒரே மாதிரியான தரத்தை உறுதி செய்திடும் நோக்கத்தில் இத்தேர்வு கொண்டு வந்ததாக கூறப்பட்டது. ஆனால் மாணவ சமூகத்தின் மருத்துவர் ஆகும் கனவிற்கு எமனாகவே இது உருவானது. தமிழ்நாட்டில் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் நீட் வந்தபின் தமிழ்வழி மாணவர்களுக்கு இது பாதகமாகவே அமைந்தது. கோச்சிங் வகுப்புகள் சென்ற 99% மாணவர்களுக்கே தேர்வில் தகுதி உறுதியானது. +2 தேர்வுக்கு தயாரான மாணவர்கள் மீண்டும் ஒரு உயர் அழுத்த தேர்வுக்கு தள்ளப்பட்டனர்.

இத்தகைய சூழலில் மன அழுத்தத்திற்கு உட்பட்டு மாணவர்கள் தற்கொலை செய்த சம்பவங்கள் தொடர்கதையானது. அரியலூர் மாணவி பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1176 பெற்றும் நீட் கைகொடுக்கா ததால் தனது கனவுகள் நிறைவேறாத நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இதுபோலவே மோனிஷா, பிரதீபா, இந்து (விழுப்புரம்) சுபாஸ்ரீ (திருச்சி) ரிது ஸ்ரீ(திருப்பூர்) வைஷ்யா (தஞ்சாவூர்) விக்னேஷ் (அரியலூர்) ஜெகதீஸ்வரன் (சென்னை) தேவதர்ஷினி (செங்கல்பட்டு) என நீட்தேர்வால் இறந்த மாணவ சொந்தங்கள் ஏராளம்…இருந்தும் கொள்ளை அடிக்கும் கோச்சிங் சென்டர்களை பாதுகாப்பதில் காட்டிய அக்கறையை மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தின் மீது மத்திய அரசு காட்டவில்லை.

NTA எனப்படும் National Testing Agency மூலம் இத்தேர்வுகள் நடைபெற்ற நிலையில் பல்வேறு முறைகேடு களும், வினாத்தாள் கசிவும் அரங்கேறியது. இருந்த போதிலும் மத்திய அரசு இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டி வந்தது. மாநில உரிமைகளுக்கு எதிரான இத்தகுதி தேர்வினை விலக்கிடும் படி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021/2022 ல் மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

தமிழ்நாடு அரசு 19.6.21 அன்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி Dr.A.K.ராஜன் தலைமையில் குழு ஏற்படுத்தி நீட் பிரச்னை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இக்குழு 14.7.21 அன்று அளித்த அறிக்கையின்படி நீட் தேர்வால் அரசு மருத்துவ கல்லூரிகளில் CBSE மாணவர்களின் ஆதிக்கமே அதிகரித்து உள்ளதை, தமிழ்வழி மாணவர்கள், விளிம்புநிலை மற்றும் கிராமப்புற மாணவர்கள் முழுமையாக இத்தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு உள்ளதை தெளிவுபடுத்தியது. இதனால் நீட் தேர்விற்கு பதிலாக பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையினை இக்குழு வலியுறுத்தியது. இதன்படி மாநில உரிமைகளுக்கும், மாணவர் உரிமைகளுக்கும் எதிரான நீட் தேர்வு முழுமையாக நீக்குவதோடு கல்வியை மாநில பட்டியலில் சேர்ப்பதே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *