சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
1950 ம் ஆண்டு அரசியல் அமைப்பு சட்டவிதிகளின் படி (Constitution(Scheduled Castes) order 1950) இந்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே எஸ்.சி என்னும் அந்தஸ்து வழங்கபட்டது. 1956ல் இதில் சீக்கியர்கள் சேர்க்கப்பட்டனர். 1990ல் பெளத்தர்களும் சேர்க்கப்பட்டனர். இதன்படி இந்து, சீக்கியர், பெளத்த மதத்தை தவிர வேறு எந்த மதத்தையும் பின்பற்றுபவர்களும் எஸ்.சி ஆக கருதப்படாததால் அவர்களுக்கான இடஒதுக்கீடு, அரசு சலுகைகள் வழங்க மறுக்கப்படுகிறது.
பெளத்தம், சீக்கிய மதங்கள் இந்தியாவில் தோன்றிய மதங்கள் என்பதால் அவை இந்துமதத்தின் ஒரு பகுதியாக கருதி இப்பட்டியலில் விதிவிலக்கு அளித்து இணைக்கப்பட்டு உள்ளது. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் வெளிநாட்டு மதங்கள் எனவும் அவை சாதி அமைப்பை அங்கீகரிப்பதில்லை என்றும் தீண்டாமை அவற்றில் இல்லை எனவும் அரசு வாதிடுகிறது. தீண்டாமை என்பது இந்து சமூகத்தின் பாரம்பரியமான வரலாற்று பிரச்னை. இது இந்து சமூகத்தில் மட்டுமே நிலவுவதால் SC பட்டியல் 1936ல் உருவாக்கப்பட்டது எனவும் மத்திய சமூகநீதி அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. 1936 மக்கள் தொகை கணக்கெடுப்பில் எடுக்கப்பட்ட இத்தகைய நிலைப்பாட்டையே உச்சநீதிமன்றங்களும் தற்போது வரையில் வழிமொழிகின்றன.
கடந்த 1985ல் உச்சநீதிமன்றம் soosai Vs Union of India வழக்கில் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் இந்து மத தீண்டாமையில் இருந்து விடுபடும் நோக்கத்தில் சென்றவர்கள் குறிப்பிட்ட SC அந்தஸ்தை இழப்பதாக தெரிவிக்கிறது. 2025 அலகபாத் உயர்நீதிமன்றம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் சலுகையை தொடர்ந்து பெற்றால் அது ஏமாற்று என்கிறது. ஆந்திரா மாநில உயர்நீதிமன்றமும் இதே கருத்தை உறுதிபடுத்தியதோடு உச்சநீதிமன்றமும் அதனை தற்போது ஏற்றுக்கொண்டு இருக்கிறது. 2009ல் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் மதம் தொடர்பின்றி SC அந்தஸ்தை விரிவுபடுத்த பரிந்துரை செய்தபோதும் மத்திய அரசு அதனை ஏற்கவில்லை.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி. கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி Dr.ரவீந்தர் குமார் ஜெயின், யுஜிசி பேராசிரியர். Dr.சுஷ்மா கொண்ட ஆணையம் கடந்த 2022 அக்டோபர் மாதம் ஏற்படுத்தப்பட்டது. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறிய பட்டியலின மக்களுக்கு எஸ்.சி அந்தஸ்து வழங்கலாமா? என்பது குறித்து இந்த ஆணையம் ஆய்வு செய்ததோடு கேரளா, குஜராத், பீகார், கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களிடம் கருத்தும் கேட்டது. இந்த ஆணையத்தின் பணிக்காலத்தை தொடர்ந்து மத்திய அரசு நீட்டிப்பு செய்து வரும் நிலையில் உரிய அறிக்கை ஆணையம் இதுவரை வழங்காத நிலையே உள்ளது.
சாதி, மதம் எனப்படும் வேறுபாடுகள் ஒழிப்பே சமத்துவத்திற்கான வழி என சமூக பொதுநல இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் தற்போதுள்ள நடைமுறையில் மதத்தின் பெயரில் மத்திய அரசு தீண்டாமை மேற்கொண்டு பட்டியலின மக்களை தரம் பிரித்து வேறுபடுத்துவதை எதிர்க்கின்றோம். மதசார்பற்ற நாடு என கூறிக்கொண்டு குறிப்பிட்ட மதத்தில் இருந்தால் தான் சலுகை மீறினால் சட்டவிரோதம் என பாகுபாடு காட்டுவது குறிப்பிட்ட பிரிவை சார்ந்த மக்களுக்கு மட்டுமல்ல மனித இனத்திற்கே செய்யும் அநீதியாகும்.எனவே மதம் மாறினாலும் அவர்களது பொருளாதார நிலை மாறாத நிலையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் அவர்களுக்கும் வழங்குவதே நீதியாகும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply