சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

பட்டாசு ஆலை வெடிவிபத்துக்களால் தொடரும் துயரத்திற்கு தீர்வு எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு பிரச்சனை

தீபாவளி என்றதும் நம் நினைவிற்கு வருவது பட்டாசு. நமது மகிழ்ச்சியிலும், கொண்டாட்டத்திலும் இத்தகைய பட்டாசுகள் தவிர்க்க இயலாததாகிப் போனது.அதனை எரித்து சந்தோஷப்படும் நாம் அதனை உருவாக்கியவர்கள் வாழ்க்கை சந்தோஷப்படும் படி உள்ளதா? என நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் சுமார் 1200 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த ஆண்டு சுமார் 8 ஆயிரம் கோடி மதிப்பில் பட்டாசுகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டது. இங்குள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் கிடங்குகள் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாததால் வெடிவிபத்துக்களால் உயிர் இழப்புகள் தொடர்வது வாடிக்கையாகிப்போனது.

சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் 2021 பிப்ரவரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 27 அப்பாவித் தொழிலாளர்களின் உயிர்கள் பறிபோனது. சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் கடந்த 2024 பிப்ரவரியில் நடந்த விபத்தில் 5 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் உடல் சிதறி பலியாயினர்.சிவகாசி அடுத்த ரெங்கபாளையத்தில் 2023 அக்டோபரில் நடைபெற்ற விபத்தில் 9 பெண்கள் உட்பட 10 பேர் இறந்தனர். இம்மாதம் 19ந் தேதி விருதுநகர் அருகே கட்டனார் பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் உடல் கருகி பலி ஆயினர். படுகாயம் அடைந்த 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் இப்பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து உள்ளனர்.

இத்தகைய விபத்துக்களின் பின்னணியில் அதிகமாக மனித தவறுகளும், பணவேட்கையுமே வெளிப்படுகிறது. உரிமம் வாங்கப் பட்ட ஆலைகளிலும் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான தொழிலாளர்களை குறிப்பிட்ட பகுதிகளில் தொழில் செய்ய வைப்பது, அதிக வெடிமருந்து கையிருப்பு வைப்பது, ரசாயன கலவை அறைகளில் அதிக நபர்களை கையாள்வது, காலை 8-10 மணிக்கு மட்டுமே கலக்க வேண்டிய ரசாயனங்களை மதியம் வரை கலக்க வைப்பது, தடைசெய்யப்பட்ட பேரியம் சல்பேட் உள்ளிட்ட ரசாயனங்களை பயன்படுத்துவது, முறையான அங்கீகாரம் இல்லாமல் ஆலைகளை செயல்படுத்துவது, பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காதது, பாதுகாப்பு உபகரணங்களை கையாளமல் இருப்பது உள்ளிட்ட விதிமீறல்களும், பாதுகாப்பு அலட்சியமும், அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாதது என பல்வேறு குளறுபடிகள் இங்கு குடிகொண்டு உள்ளன.

சீனா உள்ளிட்ட நாடுகளில் ரசாயன கலவை, நிரப்புதல் உள்ளிட்டவற்றில் மனித தொடர்புகளை குறைத்து எந்திரங்களை ஈடுபடுத்துவதாலும், தொழில்நுட்பங்களை கையாளுவதாலும் பெருமளவில் விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால் இங்கு முதலாளிகளின் லாப பசிக்கு அப்பாவி மனித உயிர்களே இரையாகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் அதிகாரிகள் ஆச்சரிய ஆய்வுகள் (சர்ப்ரைஸ் இன்ஸ்பெக் ஷன்) மேற்கொண்டு விதிமீறல்கள் இருப்பின் உடனடியாக குறிப்பிட்ட ஆலைகளுக்கான உரிமத்தை ரத்து செய்வதோடு உரிமையாளர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்திட வேண்டும்.பொட்டாசியம் குளோரேட்,சல்பர் உள்ளிட்ட வேதிபொருட்கள் கையாளும்போது உராய்வால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பது, அறைகள் இடையே போதுமான இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

பட்டாசுத் தொழிலில் விபத்துக்களை தவிர்க்க தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதோடு, தொழிலாளர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் இருப்பதோடு இத்தொழில் பாதுகாப்பான தொழில் என்னும் நிலையினை உருவாக்கிட வேண்டும். சிலரின் பாதுகாப்பு அலட்சியத்தினாலும்,விதிமீறல்களினாலும் விபத்துக்கள் தொடர்வதும், உயிர்கள் பறிபோவதும் நிகழ்கிறது. மனித உயிர்களுக்கு முன்னுரிமை அளித்து ஆலைகள் இயங்கிட வழிவகை செய்திட வேண்டும். தொழிலாளியின் கைகள் செய்த திரிகள் மட்டுமே எரியவேண்டும். அத்தொழிலாளியே தீயில் கரிய வேண்டாம் எனும் நிலை உருவாக்குவோம். வழக்கம் போல் கடந்து போகாமல் இனி ஒரு விதி செய்வோம். பட்டாசு ஆலைத் தொழிலாளர் உயிர் காப்போம்…

fireworks industry safety tamilnadu, labour safety fireworks india, sattur factory blast
பட்டாசு தொழில் அபாயம், தொழிலாளர் உயிரிழப்பு தமிழ்நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *