சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

டி என்.பி.எஸ்.சி தேர்வில் குளறுபடி – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

TNPSC குரூப் தேர்வில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகள்

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

தமிழ்நாடு அரசுத்துறைகளில் உள்ள காலிபணி இடங்கள் அரசின் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலமே நிரப்பபடுகிறது. அரசு இயந்திரம் சரிவர இயங்குவதற்கு, அதிகாரிகள், ஊழியர்களின் பணி முக்கியமானது. இதில் குளறுபடிகள், தவறுகள் நடக்கும் போது அரசின் நிர்வாகத்தில் பெரும் தேக்கத்தையும், தாக்கத்தையும் தற்போதும், வருங்காலங்களிலும் ஏற்படுத்தும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பணியினை மேற்கொள்ளும் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக அதன் நடவடிக்கைகளால் தொடர்ந்து கடும் விமரிசனத்துக்கு உள்ளாகி வருகிறது.

குரூப்-2 மற்றும் 2 A பதவிகளுக்கான 828 காலிபணி இடங்களுக்கான முதல்நிலைத் தேர்வில் செப்28ந்தேதி 5 லட்சத்து 53,634 பேர் விண்ணப்பித்து 4 லட்சத்து 20,217 பேர் எழுதினர். டிச 22ல் வெளியான முடிவின்படி குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கு 1,126 பேர், குரூப் 2A தேர்தக்கு 9,457 பேர் தகுதி பெற்றனர். இவர்களுக்கான முதன்மை தேர்வு தமிழகம் முழுவதும் 38 மையங்களில் பிப்8 ந்தேதி நடந்தது. இதில் சென்னையில் பல தேர்வர்களுக்கு தவறாக மையங்கள் ஒதுக்கப்பட்டது.300 பேர் பங்கேற்கும் மையத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்தனர். ஹால் டிக்கெட்டில் நடந்த குளறுபடியினால் தேர்வர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்தனர். இதற்கு தொழில்நுட்ப கோளாறு என கூறினர்.

இப்பிரச்னை தொடர்பாக தேர்வர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து துறை அதிகாரிகள் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டார். இத்தேர்வு மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இத்தகைய நிலையில் தேர்வர்கள் பலர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் நடைபெற்ற நிர்வாக சீர்கேட்டிற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம். கடந்த ஆண்டு இது போல் கேள்விதாள் மொழிபெயர்ப்பு பிழை பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. முடிசூடும் பெருமாள் (Ayya Vaikundar) என்ற பெயரை ஆங்கிலத்தில் the god of hair cutting என தவறாது மொழி பெயர்க்கப்பட்டது.

இதுபோல் கடந்த ஆண்டு அரசியல் அல்லது மதசார்பு கொண்ட கேள்விகள் அமைத்தவர்கள் பேனலில் இருந்து நீக்கப்படுவார்கள் என TNPSC அறிவித்தது. குரூப் 1 மற்றும் குருப் 4 தேர்வுகளில் பல கேள்விகளுக்கு தவறான பதில்கள் வழங்கப்பட்டது. இதனை நீதிமன்றமும் உறுதி செய்தது. குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளில் சீல் உடைக்கப்பட்ட கேள்விதாள்கள் சந்தேகங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியது. இது போல் பல்வேறு குளறுபடிகளும், குழப்பங்களும் பணியாளர் தேர்வு ஆணையத்தில் குடிகொண்டு உள்ளது.

தொடரும் இதுபோன்ற நிகழ்வுகளால் நடைபெறுவது குரூப் தேர்வா? குளறுபடி தேர்வா? என்ற கேள்வியே எல்லோர் மனதிலும் எழுகிறது. இத்தகைய குளறுபடிகள் தேர்வு எழுதுபவர்களுக்கு நம்பிக்கை குறைவு ஏற்படுத்துவதோடு, அவர்களது எதிர்கால கனவுகளும் கானல் நீராகிறது. டி.என்.பி.எஸ்.சி தலைமைப் பொறுப்பில் அதன் நிர்வாகம் குறித்த புரிதல் இல்லாதவர்களை நியமிப்பதால் தான் இத்தகைய பிரச்னைகள் எழுகின்றன. அரசின் அனைத்து துறைகளுக்கும் ஊழியர்களை தேர்வு செய்யும் குறிப்பிட்ட இத்துறைக்கு தகுதியும், அனுபவமும் வாய்ந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *