சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
16 வது நிதிக்குழு அறிக்கையின்படி தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய நிலை விவரிக்கபட்டு உள்ளது. இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் அதிக இழப்பினை சந்திக்கும் வரிசையில் உத்தரபிரதேசம் 32,400 கோடியில் முதல் இடத்தையும், ராஜஸ்தான் 18,814 கோடியில் 2வது இடத்தையும் தமிழ்நாடு 16,048 கோடி இழப்பீடும் அடைந்து 3வது இடத்தினையும் பெற்று உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள 102 பொதுத்துறை நிறுவனங்களில் 35 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்பாக 2022- 23ல் மின்துறை 9,192 கோடி இழப்பினை சந்தித்து உள்ளது.
ஆவின் பால் விலை உயர்ந்த அளவில் அதன் வளர்ச்சி உயரவில்லை.காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு பல வருடகாலமாய் பணம் கொடுக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.தமிழக அரசு ஆட்சிக்கு வந்தபின் 4 முறை மின்கட்டணம் உயர்த்தியாகி விட்டது. பல்வேறு வகைகளிலும் வரியினை அதிகரிப்பால் கூடுதலாக ரூ1.16 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இருப்பினும் நஷ்ட கணக்கு மக்களுக்கு கஷ்ட கணக்காய் தொடர்வது ஏன்? தமிழக அரசின் கடன்சுமை பொதுத்துறை நிறுவன கடன்களையும் சேர்த்து சுமார் 14.5 லட்சம் கோடி உள்ளது.
பொது துறை நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யாமல் அதன் சொத்துக்களை அடமானம் வைத்தே அரசு காலம் கடத்துகிறது. உதாரணத்திற்கு வேளாண் விற்பனை வாரியத்திடம் உள்ள ரூ 36 கோடி மதிப்பிலான சொத்து தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனுக்கு ரூ 10 ஆயிரம் கோடி கடன் வாங்க அடமானம் வைக்கப்படுகிறது. ஊழல், நிர்வாக சீர்கேடு, முறைகேடுகளால் பொதுத்துறை சீரழிக்கப்பட்ட நிலையில் பழைய கடன்களுக்கு வட்டி செலுத்துவதற்கு வருவாயில் 20 – 25% செலவாகும் சூழலில் புதிய கடனை வாங்க வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
நலத்திட்டங்களுக்கான செலவு அதிகரிப்பு, வருவாய் பற்றாக்குறை, மத்திய அரசின் வரி பகிர்வு மற்றும் மானியங்கள் சரிவர வராத நிலை என நிதி நெருக்கடியில் இருந்தபோதும் வாக்கு அரசியலுக்காக கவர்ச்சி திட்டங்களை ஆட்சியாளர்கள் வாரி வழங்குவதால் அதன் சுமையில் மாண்புமிகு. பொதுஜனங்கள் எழமுடியாத நிலையே உள்ளது. பல்வேறு தரப்பினரும் தங்கள் உரிமைக்காக வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது பொதுதுறை நிறுவனங்களின் தோல்வியாகவே பார்க்க வேண்டி உள்ளது.
இருப்பினும் உங்கள் கனவை சொல்லுங்கள் என்று உங்களால் மட்டும் எப்படி சொல்ல முடிகிறது என முதல்வரை கேட்க தோன்றுகிறது. அதிகரிக்கும் பொதுத்துறைகளின் நஷ்டம் மற்றும் நாள்தோறும் பெருகும் கடன்சுமை தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாகவே உள்ளது. ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி செல்வது இருக்கட்டும். குடிமக்கள் ஒவ்வொருவரையும் குடிகார மக்களாக உருவாக்குவதை நிறுத்துங்கள். ஒவ்வொருவர் பொருளாதாரத்தையும் உயர்த்த எப்போது சிந்திக்க போகிறீர்கள்?
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply