சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மதுரை மாவட்டம் கருங்காலக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குன்னங்குடி பட்டியில் பல்வேறு தொல்லியல் சின்னங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் 5000 முதல் 10 ஆயிரம் வரையிலான ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த காலத்தை பெருங்கற்காலம் எனவும் இக்காலத்து ஈமசின்னங்களை பெருங்கற்படை சின்னங்கள் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இங்கு கற்குவைகள், கல்வட்டங்கள், கல்பதுக்கைகள், நடுகற்கள் அதிகமான அளவில் உள்ளன. கி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி(தமிழ் பிராமி) கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன.
மேலும் சமணத்துறவிகள் தங்கிய படுகைகள், குகைத்தளங்கள் இங்குள்ள பஞ்சபாண்டவர் குன்றில் உள்ளது. இங்கு சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள், சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் காணப்படுகிறது. இங்கு சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் பெருங்கற்கால சின்னங்கள் பழங்கால மக்களின் வாழ்வியலை உணர்த்துபவையாக திகழ்கின்றன.
10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் பயன்படுத்திய கற்கால கருவிகள் இப்பகுதியில் எங்கும் விரவி கிடக்கின்றன. புதியகற்கால கருவிகளை கூர்மைபடுத்தும் தளமாக இங்குள்ள மலையாண்டி மலையினை முன்னோர்கள் பயன்படுத்தியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.கல்திட்டைகளில் இரு அறைகள் போன்ற அமைப்புகள் உள்ள நிலையில் இறந்தவர்களை தாழியில் புதைத்து அதன்மேல் கற்களால் குறியீடுகள் அமைத்து உள்ளதும் தெரிய வருகிறது. இப்பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு செய்தால் பழந்தமிழர் வாழ்க்கை பற்றியும் பண்பாடுகள் பற்றியும் வாழ்வியல் முறைகள் குறித்தும் பல்வேறு உண்மைகள் தெரிய வரலாம்.
இப்பகுதி மாநில மற்றும் மத்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்ட முக்கிய தொல்லியல் தளமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் எவ்வித பாதுகாப்போ, பராமரிப்போ இன்றி இயற்கை சீற்றங்கள் மற்றும் மனிதர்களால் இவை படிப்படியாக அழிந்து வருகிறது. கையில் உள்ள புதையலை அதன் மகத்துவம் தெரியாமல் புதைத்து வைப்பது போலவே பெருங்கற்கால சின்னங்கள் என்னும் வரலாற்று ஆவணங்களை நமது அலட்சிய போக்கினால் இழந்து வருகின்றோம்.
மனித நாகரிகத்தின் தொடக்க கால வரலாற்று சான்றுகளாக மிஞ்சி நிற்பவை இங்குள்ள எச்சங்கள். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இத்தொல்லியல் தளத்தை பாதுகாத்து, பராமரிப்பதோடு தொல்லியல் ஆய்வுகள் இங்கு விரிவாக மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு பெருங்கற்கால சின்னங்கள் அதிகமாக கொண்ட இப்பகுதியில் உள்ள பொருட்களை காட்சிபடுத்திடும் வகையில் இங்கு தொல்லியல் பூங்காவினை உருவாக்கிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply