சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

மீண்டு வந்த அனுமன் நதி மீண்டும் மாண்டு போகும் அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

ஆக்கிரமிப்பு மற்றும் மாசு காரணமாக பாதிக்கப்பட்ட அனுமன் நதி

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரி மலைப்பகுதியில் ஆலந்துறை ஆறு உற்பத்தி ஆகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கஞ்சிப்பாறை அணைக்கட்டு உள்ளது. அதிலிருந்து நீர் திருப்பிவிடப்பட்டு மேல்நிலைக் கால்வாய் மூலம் சுறா வழி அணைக்கட்டுக்கு செல்கிறது. கஞ்சிப்பாறை அணைக்கட்டில் இருந்து வரும் உபரிநீர் அனுமன் நதியாக உருக்கொண்டு ரோஸ்மியாபுரம், பணகுடி, லெப்பைகுடியிருப்பு, பெருங்குடி, வடக்கன்குளம், சிவசுப்பிரமணியபுரம், கோலியான்குளம், ஊரல்வாய்மொழி, இருக்கன் துறை, ஸ்ரீரங்கநாராயணபுரம் வழியாக 32கி.மீ பயணித்து பெருமணல் அடைந்து கடலில் கலக்கிறது.

இந்நதியின் குறுக்கே சிவன் பிள்ளை அணைக்கட்டு, செந்தில் காத்தாயன் / தண்டையார் குளம்,செஞ்செட்டி, பெருங்குடி அணைக்கட்டு, வடக்கன்குளம், அழகநேரி, கோலியான்குளம், அடங்கார்குளம், சக்கிலியான் பாறை, காஞ்ச நேரி அணைக்கட்டு என 11 அணைக்கட்டுகள் கட்டப்பட்டு உள்ளன. இதன்மூலம் 47 குளங்கள் பலன் பெறுவதோடு இதனை நம்பி உள்ள பல ஏக்கர் நிலங்கள் விவசாயத்திற்கும், இதனை சார்ந்த கிராமங்களின் தாகத்தை தீர்ப்பதற்கும், நிலத்தடி நீர் ஆதாரத்திற்கும் இதுவே அடிப்படையாக திகழ்கிறது.

இந்நிலையில் அனுமன் நதி ஆக்கிரமிப்பாலும், கழிவுநீர் கலப்பாலும் தனது பொலிவினை இழந்து கழிவுநீர் ஓடையாக உருமாற்றம் கொண்டது. இதனால் அனுமன் நதியினை நம்பி இருந்த விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளானதுடன் கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கொரானா காலகட்டத்தில் அனுமன் நதி வழியோர கிராம மக்களால் நம் அனுமன் நதி என்னும் குழு ஏற்படுத்தப்பட்டு தன்னார்வலர்களாக செயல்பட்டு குறிப்பிட்ட நதியின் ஆக்கிரமிப்பினை அகற்றி, நதியினை புனரமைத்ததின் மூலமாய் சாக்கடையாய் இருந்த நதி பூக்கடையாய் புன்னகை பூத்தது.

இவர்களது அபாரமான முயற்சியினால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்வரத்து இல்லாமல் தரிசாய் கிடந்த நீர்நிலைகள் நிரம்பியது. இதன் சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாய் உயர்ந்தது. மாண்டு போன ஓர் நதி மீண்டும் உயிர் கொண்டது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் மக்களின் அலட்சியத்தால், ஆக்கிரமிப்பால் தற்போது மீண்டும் தனது அழகினையும், இயல்பினையும் இழக்க தொடங்கி உள்ளது. இதனால் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதோடு, கடை வரம்பு பகுதி வரையில் நீர் தங்குதடையின்றி செல்ல இயலாத நிலையே உள்ளது.

குறிப்பிட்ட அனுமன் நதி நெல்லை மாவட்டத்தில் உள்ளபோதிலும் குமரி மாவட்ட நீர்வள ஆதாரத் துறையின் பராமரிப்பிலேயே இருந்து வருகிறது. இதனால் இரு மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளாததால் ஆதரவற்ற குழந்தையாய் நிதி ஒதுக்கப்படாமல் நிர்கதியான நிலையில் உள்ளது இந்நதி. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆலந்துறை அணை சார்ந்த சுமார் 36 கோடியே 18 லட்சம் செலவிலான பழுதுபார்ப்பு பணிக்கென டெண்டர் அறிவிப்பை அரசு அறிவித்து உள்ளது. இத்திட்டம் எப்போது நடக்கும்? அல்லது கண்துடைப்பிற்கான அறிவிப்பா? என்பதற்கு வருங்காலங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். நாகரிகத்தின் தொட்டிலான நதிகளை நாம் சுயநல வேட்கையால், வேட்டையாடி கொன்று வருகின்றோம். அந்த வரிசையில் பல்வேறு உயிர்களுக்கும் ஆதாரமான அனுமன் நதியினையும் தயவு செய்து இணைத்து விடாதீர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *