சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

சேலம் மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் தனியாருக்கு தாரைவார்ப்பு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

சேலம் மாநகர குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு

சேலம் மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக சூயஸ் என்னும் பிரெஞ்சு நிறுவனத்துடன் கடந்த 19.6.26 அன்று ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.. திட்ட மதிப்பு சுமார் ரூ 4295 கோடி எனவும் 25 வருடகாலத்திற்கு குறிப்பிட்ட நிறுவனம் செயல்படுத்திட முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சிக்கூட்டத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து ஜூன் 29ல் குறிப்பிட்ட டெண்டரை ரத்து செய்வதாக மேயர் அறிவித்தார். ஆனால் ஜூலை 9ந் தேதி தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட திட்டம் ஒப்பந்தம் ஆன நிலையில் அதனை கைவிட முடியாது என கைவிரித்து விட்டது.

தனியார் நிறுவனம் லாபநோக்குடன் மட்டுமே செயல்படும். மேலும் நுகர்வு அடிப்படையிலான மீட்டர் கட்டணம், டெபாசிட் உயர்வு, கட்டண உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீர் விநியோகம் தனியார் மயமாக்கப்படுவதால் பொதுக்குழாய் மூடப்படலாம். இதனால் ஏழை, எளிய மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை உள்ளது. குடிநீர் அத்தியாவசிய அடிப்படை உரிமை. இதனை பன்னாட்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பது அரசின் நேரடிப்பொறுப்பை விலக்கி நீரை சந்தைப்பொருளாக மாற்றும்.

மக்களுக்கு தங்குதடையின்றி தரமான குடிநீரை வழங்க வேண்டியது அரசின் அடிப்படை கடமை. அதனை தனியாருக்கு தாரைவார்ப்பது கண்டிக்கதக்கது. குறிப்பிட்டதிட்டத்தின் படி கட்டமைப்பு பணிகளுக்கு மத்திய-மாநில அரசு நிதி பயன்படுத்தப்படும் நிலையில் 25 ஆண்டுகால பராமரிப்பு செலவுக்கு மட்டும் சுமார். 3259 கோடி குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் மாநகராட்சிக்கு நிதிச்சுமை ஏற்படுவதோடு இதனை ஈடுகட்ட வரி அதிகரிப்பால் மக்களே பாதிக்கப்படுவர்.

லாபநோக்கில் தனியார் நிறுவனம் செயல்படும் என்பதால் வருமானம் கிடைக்கும் பகுதிகளுக்கே முன்னுரிமை அளிக்கும். இதனால் விளிம்பு நிலை மக்களின் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாத நிலை ஏற்படும் என்பதை நிறுவன கடந்த கால செயல்பாடுகள் மூலம் அறியலாம். பொலிவியா மற்றும் அர்ஜெண்டினா ஆகிய இடங்களில் கட்டண உயர்வு, ஏழை மக்கள் பாதிப்பு, சுற்றுசூழல் மீறல்கள் போன்றவற்றில் மக்கள் போராட்டம் காரணமாக ஒப்பந்தம் ரத்தானது. இதையடுத்து சூயஸ் நிறுவனம் அரசுகளிடம் இழப்பீடு கோரி சர்வதேச நடுவர் மன்றத்தினை நாடி உள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் 2018 முதல் இந்நிறுவனம் குடிநீர் விநியோக திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. பணி மற்றும் குறைபாடு களை சரிசெய்வதில் தாமதம், சாலைகள் சீரமைப்பதில் மெத்தனம், மக்கள் புகார்களை கண்டு கொள்ளாமை, குழாய் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. 24 மணி நேர குடிநீர் வழங்கல் என உறுதி அளிக்கப்பட்டாலும் குடிநீர் போன்ற அத்தியாவசிய பொது சேவையை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதால் இலாப நோக்கே முன்னிறுத்தப்படும். மக்களின் தண்ணீர் உரிமை பறிக்கப்படுகிறது. இதனால் குடிநீர் மக்களுக்கா, வணிகத்திற்கா என்ற கேள்வியே எழுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *