சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

பெருக்கெடுக்கும் இலவச திட்டங்கள்.. கடன் சுமக்கும் தமிழக மக்கள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் அதிகரித்து வரும் இலவச திட்டங்கள் மற்றும் அதன் பொருளாதார தாக்கம்

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை வெளியிட்டு உள்ளன. அனைத்து கட்சிகளுமே இலவச திட்டங்களை வாரி வழங்கி உள்ளன. கவர்ச்சி திட்டங்களால் மக்களை கவர வலை விரித்து உள்ளன.தி.மு.க தனது அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ 2000 இலவசமாக வழங்குவோம் எனவும் ரூ 8000 மதிப்பிலான கூப்பன் வழங்குவோம் உள்ளிட்ட பல திட்டங்களை தெரிவித்து உள்ளது.அ.தி.மு.க தனது அறிக்கையில் இலவச ரெப்ரிஜிரேட்டர் தருவோம் எனவும் 3 கேஸ் சிலிண்டர், ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் உள்ளிட்ட சலுகைகளும், தமிழக வெற்றி கழகம் பெண்களுக்கு மாதம் ரூ 2500 ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட திட்டங்களை அள்ளி வழங்கி உள்ளது.

அறிவிக்கப்படும் இத்தகைய திட்டங்களால் மக்கள் உழைக்கும் திறனை குறைத்து அவர்களை அரசு உதவியை மட்டுமே எதிர்பார்க்கும் மனநிலைக்கு தள்ளி உள்ளது. மேலும் அரசின் நிதிநிலையை சீரழித்து நீண்டகால பொருளாதார வளர்ச்சி பாதிப்பையே ஏற்படுத்துகிறது. தமிழக அரசின் கடன்தொகை ரூ 10.71 லட்சம் கோடி என பட்ஜெட்டின் போது தெரிவிக்கப்பட்டது. வருவாய் வரவுகளில் 21% இலவச திட்டங்களுக்கு என வாங்கப்பட்ட கடன்தொகைக்கான வட்டிக்கு மட்டுமே செல்கிறது. இதனால் புதிய திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல பணிகள் தடைபடும் நிலையே ஏற்படுகிறது.

கடந்த மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் இது தொடர்பாக மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையாக இருந்த போதிலும் இலவசங்களை வாரி வழங்குவதை நிறுத்தவில்லை. இது வேலை செய்யாமல் வெகுமதி கலாச்சாரத்தை உருவாக்குவதோடு, பொருளாதார வளர்ச்சியையும் தடுக்கிறது என வேதனை தெரிவித்து உள்ளார். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளால் மக்கள் நலன் மேம்படும். மாறாக தேர்தலை மனதில் கொண்டு வாக்கு வேட்டைக்காக அளிக்கப்படும் வாக்குறுதிகள் அரசியல் கட்சிகளுக்கு வேண்டுமானால் வெற்றியைத் தரலாம். ஆனால் அதனால் ஏற்படும் வரிச்சுமையினை மக்கள் தான் சுமக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.

கடந்த காலங்களில் அரசால் வழங்கப்பட்ட தரமற்ற இலவச பொருட்கள் முழுமையாக ஆக்கர் கடைக்கே சென்றது. இதனால் மக்கள் பணம் விரயம் ஆனதோடு சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை இவை ஏற்படுத்தும் நிலையே உருவானது. மக்களை எளிதில் கவர்வது இலவச திட்டங்கள் என்பதால் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளுமே இலவச திட்டங்களை அறிவிப்பதில் போட்டி போடுகின்றன. மக்களின் மனோபாவத்தை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளி உள்ளது தமிழக வளர்ச்சிக்கு பெரிதும் தடையாகவே இருந்த போதிலும் தேர்தல் வெற்றியை தீர்மானிப்பதில் இவை தவிர்க்க முடியாததாகி போனது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு, வாக்கு சேகரிப்பதற்கு, வாக்கு அளிப்பதற்கு என அனைத்து சூழலிலும் வாடகை மனிதர்களை நம்பியே உள்ளது. இதனால் தேர்தலில் பணம் தவிர்க்க முடியாத சக்தியாகி வியாபாரமாகிப்போனது. இதனால் ஜனநாயகம் பணத்தின் மீதே தீர்மானிக்கப்படுவதால் தேர்தலில் மக்கள் நலன் புறந்தள்ளப்பட்டு யார் அதிகமாக வாக்காளர்களுக்கு பணம் அளிக்கிறார்களோ அவர்களே வெற்றிபெற இயலும் என்ற நிலையினை அரசியல் கட்சிகள் உருவாக்கி விட்டன. இதன் பிரதிபலிப்பாக வாக்களித்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக இலவச திட்டங்கள் என்னும் தூண்டில் வீசப்படுகிறது. நமக்கு தேவை வளர்ச்சி திட்டங்களே என்பதை நாம் தேர்தல் மூலம் சொல்லித்தான் தீரவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *