சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

பாரம்பரிய பெருமைமிக்க காரியாபட்டி தோப்பறைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

மதுரை சித்திரைத் திருவிழாவில் பயன்படுத்தப்படும் காரியாபட்டி தோப்பறை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தோப்பறை என்பது இப்பகுதியில் மட்டுமே ஆட்டுத்தோலில் இருந்து தயாரிக்கப்படும் தனித்துவமான நீர் பீய்ச்சும் பை ஆகும். இது வெறும் பொருள் அல்ல தமிழ்நாட்டின் கலாச்சார பாரம்பரியம். ஆன்மீக சடங்கு மற்றும் உள்ளூர் கைவினைத்தொழிலின் உயிரோட்டமாக திகழ்கிறது. உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா (கள்ளழகர் திருவிழா)வில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் தீர்த்தவாரி நிகழ்வின் போது பக்தர்கள் இந்த தோப்பறையினை பயன்படுத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்து அழகரை குளிர்விக்கின்றனர்.

சித்திரை மாதம் என்றாலே கத்திரி வெயில் தகிக்கும் காலம். அந்த வெப்பத்தில் வெகுதூரம் பக்தர்கள் அழகரை சுமந்துவரும் நிலையில் அவர்களை/அழகரை குளிர்வித்து வெப்பத்தை தணிக்க இந்த தண்ணீர் பீய்ச்சும் முறை காலம்காலமாக பின்பற்றப்படுகிறது. இது வெறும் சடங்கு மட்டுமல்ல. பக்தர்களின் அன்பை வெளிப்படுத்திடும் குளிர்ந்த காணிக்கையாகும். இந்நிகழ்வின் போது கள்ளழகர் வேடம் அணிந்த குழந்தைகள் உட்பட பக்தர்கள் தோளில் தொங்கும் தோப்பறையில் இருந்து நீரை பீய்ச்சி அடிப்பது நேர்த்திகடனாக பின்பற்றி வருகின்றனர்.

இத்திருவிழாவையும் தோப்பறையும் பிரிக்க இயலாது. ஆட்டுத் தோலை சுண்ணாம்பு, ஆவாரம்பூ, கடுக்காய், கருவப்பட்டை போன்ற இயற்கை சார்ந்த பொருட்களால் 3 மாதங்கள் (தை முதல் பங்குனி வரை) பதப்படுத்தி வலதுகால் துளையில் தண்ணீர் பாய்ச்சும் வகையில் தைக்கப்படுகிறது. காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 350 குடும்பத்தினர் கடந்த 8 தலைமுறைகளாக தொடர்ந்து இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தோப்பறையின் அளவை பொறுத்து ரூ 300 முதல் 800 வரை விற்பனை செய்யப்படுகிறது. மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக மட்டுமே இவை தயாரிக்கப்படுகிறது. இதன் பயன்பாடு இன்றி திருவிழா முழுமை அடையாது என்றே சொல்லலாம்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் தனித்துவமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 74 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ள நிலையில் தனித்துவமிக்க இயற்கை சார்ந்து தயாரிக்கப்படும் காரியாப்பட்டி தோப்பறைக்கு இதுவரை புவிசார் குறியீடு வழங்கப்படவில்லை. பாரம்பரியமிக்க இக்கைவினைத் தொழில் அழிந்து வரும் நிலையினை தடுக்க உரிய அங்கீகாரம் அளித்திடும் வகையில் புவிசார் குறியீடு அளிக்கப்பட வேண்டும்.

இத் தொழிலில் ஈடுபடுவோர் லாப நோக்கு இல்லாமல் பல்வேறு சிரமங்கள் மற்றும் நஷ்டத்திற்கும் மத்தியில் தொடர்ந்து ஆன்மீக சேவையாகவே கருதி இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை-காரியாபட்டி இடையிலான இத்தகைய கலாச்சார பிணைப்பு சாதி-சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாகவும், சுற்றுசூழல் நட்பு உணர்வை பிரதிபலிப்பதாகவும் உள்ளது. இக்கைவினைத் தொழிலில் ஈடுபடுவோர் வாழ்வாதாரம் மேம்படவும், கைவினைத்தொழில் காக்கப்படவும் நமது பாரம்பரியம் பாதுகாக்கப்படவும் காரியாபட்டி தோப்பறைக்கு புவிசார் குறியீடு வழங்குவது மிகவும் அவசியமானது.

kariyapatti thopparai GI tag, traditional leather water bag tamilnadu, madurai chithirai festival kallazhagar, tamil handicrafts GI products, heritage crafts tamilnadu
மதுரை சித்திரைத் திருவிழா சிறப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *