சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு மேல்நிலைபள்ளியில் 11வது வகுப்பு படித்து வந்த மாணவன் சிவபிரகாஷ் கடந்த 4ந்தேதி வகுப்பறையில் புத்தக பையில் இருந்து புத்தகம் எடுக்கும் போது விஷ பாம்பு தாக்கியது. தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம் அரசு தொடக்க பள்ளி 3வது வகுப்பு மாணவி ரக்ஷிதா கலைநிகழ்ச்சி ஒத்திகையின் போது விஷப்பூச்சி தாக்கிய நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் 9ந்தேதி உயிர் இழந்தார். இரு சம்பவங்களும் கடந்த ஒரு வார காலத்திற்குள் நடந்தவை. இவை அரசுப்பள்ளிகளின் பாதுகாப்பு நிலைமைகளை வெளிப்படுத்தி உள்ளன.
சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் உயிர் இழந்த சம்பவம் நம் மனதை விட்டு மறையும் முன்பே இம்மாணவர்கள் மறைந்து உள்ளனர். இவை எதிர்பாராத இறப்பு என்று எடுத்து கொள்ள இயலாது.பாதுகாப்பு குறைபாடு காரணமாக நிகழ்த்தப்பட்ட படுகொலையாக கருத வேண்டும். அரசின் தொடரும் இத்தகைய அலட்சியப் போக்கிற்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கின்றோம். தமிழ்நாட்டில் பல்வேறு அரசு பள்ளிகள் பழுதடைந்த நிலையில் உள்ளது கணக்கிடப்பட்டு உள்ளது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்ட பள்ளிகள் இவ்வாறு செயல்படுவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 7837 அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லை என ஓர் ஆய்வு கூறுகிறது. இது மாணவர்களின் சுகாதாரத்தை வெகுவாக பாதிக்கிறது.
அரசு பள்ளிகளில் போதிய கட்டிடங்களோ, குடிநீர் வசதியோ, கழிப்பறைகளோ, சுற்றுச்சுவரோ, விளையாட்டு மைதானமோ, பரிசோதனை கூடங்களோ, புதிய தொழில்நுட்ப வசதியை பயன்படுத்த ஏதுவான ஸ்மார்ட் வகுப்பறைகளோ, நூலகமோ, போதிய ஆசிரியர்களோ இல்லாத நிலையில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலை உள்ளது. இதனால் 200க்கும் மேற்பட்ட அரசுபள்ளிகள் மூடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. விளிம்பு நிலை மக்கள் முழுமையாக நம்பி இருக்கும் இப்பள்ளிகள் மேம்படுத்த உரிய நடவடிக்கை சரிவர எடுக்கப்படாததால் மூடும் பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்தவாறு உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தற்போது தண்டனைக்கு உள்ளாகி உள்ளனர். பள்ளி கல்வித்துறை கையேட்டில் கல்வி ஆண்டில் முதல் மாதத்திற்குள் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் CSA குழு அமைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் இது ஆய்வு நடத்த வேண்டும் என சொல்கிறது. இக்குழு முறையாக செயல்படுத்தப்படாத நிலையில் பல்வேறு பகுதிகளிலும் பாலியல் குற்றங்கள் நடந்தவண்ணம் உள்ளது. இதனால் ஆசிரியர் மீதான மதிப்பும், நம்பகதன்மையும் சீர்குலைகிறது. மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது இதுபோலவே கல்வி உரிமை சட்டத்தில் குறிப்பிட்ட பள்ளி மேலாண்மைக்குழுக்கள் பள்ளிகளில் முறையாக நடத்தப்படுவது இல்லை. இதனால் பள்ளிகளின் வளர்ச்சி தடைபடுகிறது.
கொடுமை படுத்துதல், உளவியல் துன்புறுத்தல் போன்றவற்றை தடுக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்து உள்ளது. ஆனால் இவை முறையாக செயல்படுத்தபடுவது இல்லை. உள்ளாட்சிகளில் கல்விவரி வசூலிக்கபட்ட போதும் அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர், பள்ளி வளாக காவலர், உதவியாளர் நிரப்பபடாத நிலையில் பெரிதும் பாதிப்புகள் ஏற்படுகிறது. நாளைய வருங்காலத்தினை நிர்ணயிப்பது இன்றைய பள்ளிகள். எனவே அதன் நலனை புறக்கணிப்பது நமது எதிர்காலத்திற்கு நாம் செய்யும் துரோகமாகும். எனவே அரசு பள்ளிகளை காக்கவும், அதனை மீட்கவும், பயிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்திடவும் உரிய நடவடிக்கை எடுப்பது அவசர தேவை.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply