சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தகவல் அறியும் உரிமைச்சட்டம் (2005) என்பது இந்தியாவில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மிக முக்கியமான சட்டமாகும். இதில் 2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திருத்தம் மூலமாக இச்சட்டம் வலிமை இழந்த நிலையில் உள்ளது. இதன்மூலம் எந்த நோக்கத்திற்காக இச்சட்டம் கொண்டுவரப்பட்டதோ அதன் பலனை பெற இயலாத நிலையில் இதன் ஆன்மா பறிக்கப்பட்டு உள்ளது.
இச்சட்டத்தின் படி தலைமை தகவல் ஆணையர் (CIC) மற்றும் தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 2019ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் படி இது மத்திய அரசு நிர்ணயிக்கும் காலமாக மாறி உள்ளது. ஊதியம், படிகள் பிற சலுகைகளையும் மத்திய அரசே முடிவு செய்யும். இதனால் தகவல் ஆணையர்கள் அரசுக்கு பயந்து அல்லது அரசுக்கு சாதகமாக முடிவு எடுக்க நிர்ப்பந்தபடும் நிலையே உள்ளது. மேலும் அரசுக்கு எதிரான தகவல்களை தயங்கும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டு உள்ளதால் வெளிப்படைத்தன்மை பாதிக்கப்படும்.
அரசு விரும்பாத ஆணையர்களை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம் அல்லது ஊதியத்தை குறைக்கலாம். மாநில தகவல் ஆணையர்களின் (SIC) ஊதியம், பதவிக்காலம் ஆகியவற்றை மத்திய அரசே முடிவு செய்யும். மாநிலங்களின் நிதியில் இருந்து தகவல் ஆணையர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் நிலையில் மத்திய அரசு கட்டுப்பாடு விதிப்பதின் மூலம் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படுவதோடு கூட்டாட்சி கொள்கைக்கும் எதிரானதாக உள்ளது.
இதுபோல் 2023 ல் Digital personal Data protection Act (DPDP) பிரிவு 44(3) திருத்தத்தின் படி தனிப்பட்ட தகவல்கள் எனக் கூறி தகவல் அளிக்க மறுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. 2025 நவம்பர் 14 அன்று இந்த திருத்தம் முழுமையாக அமலுக்கு வந்தது. இதனால் சமூகநலத்திட்டங்கள், மானியங்கள், அதிகாரிகள் தொடர்பான தகவல்களை தனிப்பட்டது எனக் கூறி மறுக்கப்படும் அவலமே உள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் Article 19 (1)(a) ன் படி மக்களின் அடிப்படை உரிமையாகும். இத்தகைய உரிமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய திருத்தங்கள் மூலம் ஜனநாயகத்திற்கே பாதிப்பு ஏற்படும். ஊழலை வெளிப்படுத்துவதற்கு பதில் அதன் வெளிப்படை த்தன்மையை பலவீனமாக்குவது ஊழல்வாதிகளுக்கே பாதுகாப்பை ஏற்படுத்தும். தகவல் ஆணையர்களை மத்திய அரசு தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதால் சுதந்திர தன்மை பாதிக்கப் படுவதோடு தகவல் முற்றிலும் மறுக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளதால் இச்சட்டமே கேள்விக் குறியாகி உள்ளது. எனவே குறிப்பிட்ட சட்டத்தின் நோக்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை உடனடியாக ரத்து செய்தாக வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply