சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

திருநர் உரிமை பாதுகாப்பு மசோதாவை திருத்த மத்திய அரசு நடவடிக்கை – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு –

திருநர் உரிமை பாதுகாப்பு சட்ட திருத்தம் குறித்து சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

திருநர்கள் மற்றும். இடைப்பாலினர் போன்றோரின் உரிமைகளை பாதுகாப்பது, பாகுபாடுகளை தடுப்பது, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், பொது சேவைகளில் சம உரிமை உறுதி செய்வதற்காக திருநர் உரிமை பாதுகாப்பு மசோதா ஆகஸ்ட் 2019ல் மக்களவையிலும், நவம்பர் 2019ல் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று கடந்த 5.12.2019 அன்று சட்டமானது.இந்நிலையில் 13.3.2026 அன்று மக்களவையில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திரகுமார் குறிப்பிட்ட இச்சட்டம் திருத்தப்படுவதாக கூறி மசோதா தாக்கல் செய்து உள்ளார்.

இதன்படி தற்போதைய சுய உணர்வு பாலின அடையாளம் (Self perceived gender identity) என்பதை நீக்கி புதியவரையறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன்மூலம் திருநர் போராடி பெற்ற உரிமை பறிபோய் உள்ளது. மேலும் மருத்துவ வாரியம் அளிக்கும் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சி தலைவர் திருநர் சான்று வழங்கும் முறை தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருநர்கள் மருத்துவ நோயாளிகள் போல சித்தரித்து இத்திருத்தம் மேற்கொள்வது அவர்களது அடிப்படை உரிமையினை பறிப்பதாகும். திருத்த சட்டத்திற்கென திருநர்களிடம் கலந்துரையாடல் மேற்கொள்ளாத நிலையில் திருநங்கை/ திருநம்பி போன்ற மதிப்பான சொற்களை தவிர்த்து ஹிஜ்ரா / யூனக் போன்ற பழைய சொற்களை பயன்படுத்தபட்டு உள்ளது.

உச்சநீதி மன்ற நீதிபதிகள் K.S.ராதாகிருஷ்ணன் மற்றும் A.K.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு 15.4.2014 அன்று அளித்த தீர்ப்பு மிக முக்கியமானதாகும். NALSA (National Legal Services Authority Union of India.) எனப்படும் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தொடரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட இத்தீர்ப்பின்படி திருநர் சமூகத்தின் உரிமைகளை அங்கீகரித்து அவர்களை மூன்றாவது பாலினம் என அறிவித்தது. இது இந்தியாவில் திருநர் உரிமைகளுக்கு அடித்தளமாக அமைந்தது. மேலும் அரசியல் அமைப்பு மற்றும் சட்டங்களின் கீழ் அவர்களுக்கு ஆண்/பெண் உள்ளிட்ட பாலினங்களுக்கு இணையான அடிப்படை உரிமைகள் உண்டு.

ஒருவரின் பாலின அடையாளம் சுய உணர்வு அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். பயோலாஜிக்கல் டெஸ்ட் (அறுவை சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை, குரோமோசோம் சோதனை) கட்டாயம் இல்லை. அறுவை சிகிச்சை அல்லது ஸ்டெரிலைசேஷன் செய்யாமலே தங்கள் பாலினத்தை ஆண/ பெண்/மூன்றாவது பாலினத்தவர் என அறிவிக்க உரிமை உண்டு. மத்திய/மாநில அரசுகள் திருநர் உரிமையினை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் சமூக ஒதுக்கலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இத்தீர்ப்பு 2019ல்திருந்ர் பாதுகாப்பு மசோதா உருவாக காரணம் ஆனது.

இந்நிலையில் திருநர் பாதுகாப்புக்கு அடிப்படையான சட்டப்பிரிவு 4(2) முழுமையாக சட்ட திருத்தத்தில் நீக்கப்படுகிறது. NALSA 2014 உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகளால் வாழும் உரிமை (Article 21) பறிபோவதுடன் அவர்களது கண்ணியம், தனி உரிமை, சுயாட்சி உள்ளிட்டவை கேள்விகுறியாகி உள்ளது. இத்தகைய பாலின ஒடுக்குமுறையினை/ உரிமை மீறலை கடுமையாக எதிர்க்கின்றோம். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி சமத்துவம், பாலின அடிப்படையில் பாகுபாடு தடை, உயிர்வாழும் உரிமை/ தனிமனித கண்ணியம், வெளிப்பாட்டு சுதந்திரம் ஆகியவற்றை மூன்றாம் பாலினத்தவர் பெற்று அவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட மத்திய அரசு மேற்கொள்ளப்பட உள்ள சட்டதிருத்தங்களை கைவிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *