சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கனிம வளக் கொள்ளைக்கு ஆதரவான அரசாணையினை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் நடைபெறும் கனிம வள சுரங்க மற்றும் கல் குவாரி பணிகள்

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

தமிழகத்தில் இயற்கை வளங்கள் கட்டுப்பாடின்றி கபளீகரம் செய்யப்பட்டு வரும் நிலையில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் வளக் கொள்ளையை தடுக்க முடியாத கையறு நிலையில் தமிழக அரசு உள்ளது. வளங்களை மீட்டுருவாக்கம் செய்ய முடியாத நிலையில் அதன் மீதான கொள்ளையால் தமிழக நீர் வளம், நிலவளம், விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் அடியோடு பாதிப்பு அடைவதோடு நிலநடுக்கம், பருவகால மாற்றம், காற்று திசைமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கும் இவை அடிப்படையாய் திகழ்கின்றன. எதிர்கால வாழ்வையும், நமது மண்ணையும் கேள்விக்குறியாக்கும் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்ட போதும் அரசியல் ஆதிக்க சக்திகள் இக்கொள்ளையினை தங்கு தடையின்றி அரங்கேற்றி வருகின்றன.

இந்நிலையில் கல்குவாரி உரிமையாளர்கள் அளித்த கோரிக்கையின் படி தமிழக அரசு K.அலாவுதீன் (ஓய்வு IAS) தலைமையில் குழு அமைத்தது. இக்குழு 31.05.24 அன்று அறிக்கை அளித்தது. இதன்படி தமிழக அரசு 22.1.2026 அன்று அரசாணை (G.O'(Ms) No.03) வெளியிட்டு உள்ளது. இது கனிமவளக் கொள்ளையினை தடுப்பதற்கு மாறாக கனிமவள கள்வர்களுக்கு வரும் தேர்தல் பரிசு அளித்ததாகவே கருத வேண்டி உள்ளது. இதன்படி கட்ஆப் தேதி 2015 ஆகக் கொண்டு கனிம வளக் கொள்ளையர்களிடம் அபராதத்திற்கு விலக்கு அளித்து ஒழுங்கு படுத்துவதாகதெரிவிக்கிறது.

ஏற்கனவே அபராதம் கட்ட தவறியவர்கள், சட்டத்திற்கு புறம்பாக கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இதன்படி 1 மெட்ரிக் டன்னிற்கு ரூ 25 அபராதம் செலுத்தினால் அவர்கள் குற்றமற்றவர்கள் ஆகி விடுவார்கள்.

ஏற்கனவே கனிமவள பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள், உயர்/உச்சநீதிமன்ற உத்தரவுகள் உள்ள போதிலும் அதன் முனையினை மழுங்கடிக்கும் விதமாய் தமிழக அரசு வெளியிட்டு உள்ள இந்த ஆணை கனிமவளக் கொள்ளையர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் உள்ளது.

இது தொடர்பாக கடந்த 7.02.26 அன்று கனிம வளக் கொள்ளையினை அங்கீகரிக்கிறதா தமிழக அரசு? என்ற தலைப்பில் சமூக பொதுநல இயக்கம் தனது எதிர்ப்பினை தெரிவித்து அறிக்கையின் மூலம் கண்டனம் தெரிவித்து இருந்தது.தமிழகத்தில் 5832 கோடி மதிப்பிலான சட்டவிரோத கனிமவளங்கள் திருடப்பட்டதாக கணக்கிடப்பட்ட நிலையில் அபராத தொகையினை 10ல் ஒரு பங்காக குறைப்பதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு வளக் கொள்ளையர்களை வளப்படுத்துவதாகவும், அவர்களை சட்டபூர்வமாக பாதுகாப்பதாகவும் அமையும்.

கனிமவளக் கொள்ளையினை தடுக்க முயல்பவர்கள் கொலை செய்யப்படுவதும், புகார் அளிப்பவர்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்படுவதும் வாடிக்கையான நிகழ்வாகி வருகிறது. இக்கொள்ளையினால் இயற்கை வளம், சுற்றுசூழல் பாதிப்பு கொள்வது குறித்து ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கவலை கொண்டதாக தெரியவில்லை.இத்தகைய சட்டதிருத்தம் கனிமவளக் கொள்ளையினை தடுப்பதற்கு பதில் அதற்கு அங்கீகாரம் அளிப்பதாகவே உள்ளது.இத்தகைய நடைமுறை உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராகவும், இயற்கை நலனிற்கும், சுற்றுசூழல் பாதுகாப்பிற்கும் எதிராகவே உள்ளது. எனவே கனிமவளக் கொள்ளைக்கு ஆதரவான இந்த ஆணையினை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

கனிம வள அரசாணை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பிரச்சனை, இயற்கை வள பாதுகாப்பு
தமிழக கனிம வள கொள்ளை, சட்டவிரோத மணல் மற்றும் கல் சுரங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *