சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

சுற்றுச்சூழலுக்கு எதிரான கனிமவள சுரண்டலுக்கு ஆதரவான பட்ஜெட் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

இந்தியாவில் கனிமவள சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

2026-27 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளார். இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கு எதிரான பல்வேறு அறிவிப்புகள் சுற்றுச்சூழலுக்கும், மக்கள் வாழ்வுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துபவையாக உள்ளதோடு மக்களின் எதிர்பார்ப்புகள் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பவையாகவே உள்ளது. இந்தியா காலநிலை பாதிப்பிற்கு உள்ளாகும் நாடுகள் வரிசையில் 7வது இடத்தில் உள்ளது. தவறான வளர்ச்சி திட்டங்களால் இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு, நிலச்சரிவு இதன் அறிகுறிகள். கண்முன் காணும் உதாரணங்கள்.

இச்சூழலில் இத்தகைய பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்தவைகள் அத்தனையும் பொய்யாகி போனது. சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு ரூ3412 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. GDP யில் இதன் விகிதம் 0.009% மட்டுமே. வடமாநிலங்கள் காற்று மாசுபாட்டில் தத்தளிக்கும் நிலையில் மாசுகட்டுப்பாட்டிற்கான நிதி ஒதுக்கிடு கடந்த ஆண்டில் ரூ 1300 ஒதுக்கப் பட்ட நிலையில் தற்போது ரூ1091 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. காற்று மாசுகட்டுப்பாடு, NCAP (National Clean Air Programe). போன்றவற்றிற்கான நிதி குறைந்ததால் பொதுசுகாதாரம் பாதிக்கப்படும் அவலம் உள்ளது.கடந்த பட்ஜெட்டில் மாசுகட்டுபாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 1% கூட செலவிடவில்லை என நாடாளுமன்றக்குழு தெரிவித்து உள்ளது குறிப்பிடதக்கது.

அரியவகை கனிமங்களை அகழ்ந்தெடுப்பது, பிரித்தெடுத்தல், ஆய்வுகள் உள்ளிட்ட பணிகளுக்கென தாது வளம் நிறைந்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அரியவகை கனிமங்களுக்கான வழித்தடங்கள் அமைக்கப் படும் என அறிவிக்கபட்டு உள்ளது. அரியவகை முக்கிய கனிமங்களின் இருப்பு தொடர்பான ஆய்வுகளுக்கு உண்டாகும் செலவுகளுக்கு வரிச் சலுகை வழங்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய அறிவிப்புகள் தமிழ்நாட்டின் சூழல் பாதிப்பிற்கு எதிரானவை. பெருநிறுவனங்கள் கனிமங்களை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று லாபம் ஈட்டுவதற்காக நமது நீர் மற்றும் நிலவளத்தையும் நாம் இழக்க நேரிடும் நிலையே இதனால் ஏற்படும்.

2025ல் அணுசக்தி துறை தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட நிலையில் இந்தியாவின் இயற்கை வளங்களை சுரண்டி கொள்ள சலுகை அறிவிக்கபட்டு அணுக்கனிமம் முதல் அரிய வகை கனிமம் வரை தனியார் நிறுவனங்கள் அகழ்ந்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கனிமங்கள் கண்டறியபட்ட இடங்கள் ஏலமிடும் உரிமை ஒன்றிய அரசிடம் சென்று விட்ட நிலையில் இயற்கை வளங்கள் எல்லையின்றி கபளீகரம் செய்யப்படும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளோம்.

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு பதிலாக பெருநிறுவனங்களின் கனிமவள சுரண்டல் மற்றும் லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலேயே பட்ஜெட் அமைந்து உள்ளது. பெருநிறுவனங்களின் நலனை மட்டும் கவனத்தில் கொண்டு மக்கள் நலன் மறக்கப்பட்டதால் இதனால் சூழலியல் பாதிப்புகள், பல்லுயிர் பெருக்கம், மாசு ஒழிப்பு, காலநிலை பாதிப்புகள், இயற்கை வளபாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *