சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் மீது ஜாதிவெறி தாக்குதல் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் மீது ஜாதிவெறி தாக்குதல் சம்பவம் குறித்து கண்டனம்

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூர் அரசுப்பள்ளியில் கடந்த 19ந்தேதி அன்று 11ம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் மீது பள்ளி கழிவறையில் வைத்து சக மாணவர்கள் ஜாதிவெறியுடன் கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஜீவானந்தம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கின்றோம். சமீப காலமாக பள்ளிகளில் ஜாதி அடிப்படையில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் அதிர்ச்சியினை ஏற்படுத்துவதாக உள்ளன. பள்ளிகள் ஒற்றுமையினை கற்பிக்கும் இடங்கள் என்ற நிலைமாறி பாகுபாட்டை உருவாக்கும் பட்டறைகளாக திகழ்வது கவலை அளிப்பதாகவே உள்ளது.

கடந்த (2025) ஆண்டு ஈரோட்டில் பிளஸ் டூ மாணவன் சக மாணவர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுபோல் கும்பகோணத்தில் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவன் 11ம் வகுப்பு படித்து வந்த 14 மாணவர்களால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் 3 நாட்களுக்கு பின் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவன் சக மாணவர்களால் தீயிட்ட குப்பைத்தொட்டியில் தூக்கி வீசப்பட்டான். சாதி அடிப்படையில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்று உள்ளது.

இதன் தொடர்ச்சியாக முதலூர் பள்ளி மாணவர் தாக்கப்பட்டு உள்ளார். இதுவரை இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்யாமல் போலீசார் மெளனம் காத்து வருவதாக கூறப்படுகிறது. தென்மாவட்டங்களில் ஏற்கனவே ஜாதிய மோதல்கள் நடைபெறுவது வெகுவாக குறைந்து போனது மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்த போதும் அதற்கு எதிராக தற்போது பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சாதிவெறியுடன் நடைபெறும் மோதல்கள் அபாயகரமான போக்காகவே தென்படுகிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்கள் இடையே சாதி அடிப்படையிலான வன்முறைகளை தடுக்க நீதிபதி. சந்துரு தலைமையிலான குழு ஆசிரியர்கள் சாதி, மத உணர்வுகளை தூண்டினால் கடும் நடவடிக்கை/ பள்ளிகளில் சாதி அடையாளங்கள் (கயிறு, திலகம்) உள்ளிட்டவற்றை தடை செய்தல்/ சாதி பாகுபாடு குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை உள்ளிட்ட பல பரிந்துரைகளை அளித்தது. ஆனால் இதுவரையில் இந்த பரிந்துரைகள் தமிழக அரசால் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கல்வி பயிற்றுவிக்கப் படும் பள்ளிகள் மாணவர்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல நாட்டின் எதிர்காலத்தையும் நிர்ணயிப்பவை.

இதனை கவனத்தில் கொண்டு நீதிபதி.சந்துரு அறிக்கையினை அமல்படுத்திட அரசு அக்கறை காட்டவேண்டும். பிஞ்சுகள் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் இதுபோல் நடைபெறும் சம்பவங்கள் முளையிலேயே வேரறுக்கப்பட வேண்டும். ஜாதி, மத, பேதமற்ற சமத்துவ சமுதாயம் உருவாக்கிட பெற்றோர், ஆசிரியர், அரசு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயத்தேவையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *