குமரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி சாலைப் பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறும் பகுதிகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களின் வேகத்தை குறைத்திடும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை எச்சரிக்கும் விதமாக வேகத்தடைகளில் கோடுகள் பதிக்கப்படும். இதுபோல் இரவு காலங்களில் இப்பகுதிகளில் ஒளிரும் பிரதிபலிப்பான்கள் அமைக்கப்படுவது வழக்கம்.
குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு வேகத்தடைகளில் அமைக்கப்படும் எச்சரிக்கை குறியீடுகள் பழுதடைந்தபின் அல்லது அழிந்த பின்னர் அவற்றை முறையாக பராமரித்து அழிந்த பகுதிகளில் மீண்டும் கோடுகள் போடப்படுவது இல்லை. இதனால் இப்பகுதிகளில் உள்ள வேகத்தடைகள் வாகனங்களில் வருபவர்கள் கண்டுபிடிக்க முடியாத நிலையில் விபத்துக்கு உள்ளாக நேரிடுகின்றது.
குறிப்பாக புதுக்கடை முதல் தேங்காய்பட்டணம் வரையிலான சாலையில் பைங்குளம் சந்திப்பில் உள்ள வேகத்தடையில் எச்சரிக்கை குறியீடுகள் அழிந்து பல மாதம் ஆகிறது. இதுபோலவே முக்காடு பகுதியில் பழுதடைந்த வேகத்தடையினால் விபத்துக்கள் தொடர்ச்சியாக நடக்கிறது. மேலும் பைங்குளம்-பார்த்திபபுரம் சாலையில் வேகத்தடை குறிக்கும் வகையில் எந்தவித எச்சரிக்கை கோடுகளும் இல்லை. இத்தகைய அவலநிலையினால் இப்பகுதி மக்கள் மட்டுமில்லாது இம்மார்க்கம் வழியாக செல்லும் அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் IRC வழிகாட்டுதலின்படி வேகத்தடை பகுதிகளில் கண்டிப்பாக நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை குறியீடுகள் அமைக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட துறையினர் இதில் உரிய கவனம் செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதால் உயிர் ஆபத்து ஏற்படும் சூழலே உள்ளது. இதனை போக்கிடும் வகையில் பைங்குளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் எச்சரிக்கை கோடுகள் உடனடியாக அமைத்திட சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா,அமைப்பு செயலாளர் புதுக்கடை பாண்டியன், துணை தலைவர் பேரா. C மோகன், மாவட்ட மீனவர் அணிச் செயலாளர் A. ததேயுஸ், முஞ்சிறை ஒன்றிய செயலாளர் R.சாம் எட்வர்ட், ஒன்றிய அமைப்பு செயலாளர் N.வினுகுமார், மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply