சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
காவிரி ஆற்றில் மேட்டூர் அணையில் இருந்து உபரிநீராக ஆண்டுதோறும் 40 முதல் 50 டி.எம்.சி நீர் பயன்பாடின்றி கடலில் வீணாக கலக்கிறது. இதனை பொன்னியாறு, திருமணிமுத்தாறு ஆறுகளுடன் இணைத்து சரபங்கா, ஐயாறு வழியாக திருப்பி விடுவதால் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சுமார் 11/2 லட்சம் விவசாய விளைநிலங்கள் பயன்பெறுவதோடு 100க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இதன்மூலம் நிரம்பும். இதனால் இப்பகுதியின் வறட்சி நீங்குவதோடு நிலத்தடி நீர்மட்டமும், விவசாயமும் மேம்படும். மக்களின் குடிநீர் தேவையும் இத்திட்டத்தால் நிவர்த்தியாகும்.
தமிழ்நாட்டின் முக்கிய இத்தகைய நதிநீர் இணைப்பு திட்டத்தினை நிறைவேற்றிடும் படி கடந்த 1950 முதல் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 2018ல் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இத்திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ 650 கோடி எனவும் திட்டமிடப் பட்டது. ஆனால் உரிய நிதி ஒதுக்கப்படாத நிலையில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின் ஆட்சிமாற்றம் நடைபெற்ற பின்பும் இத்திட்டத்தினை நிறைவேற்றிட எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளாத நிலையில் இத்திட்டம் முடங்கிய நிலையிலேயே உள்ளது.
குறிப்பிட்ட திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்புவதால் விவசாயிகளின் பெரும் துயரம் நீங்கும். அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இதுபோல் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் இப்பகுதி மக்கள் பெரிதும் பயன்பெறுவர். இருந்தும் இக்கோரிக்கை ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளப்படாததால் திருச்செங்கோடு, எலச்சிபாளையம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இருந்தும் இவர்களது நியாயமான கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கைப் போலவே கேட்பாரற்று உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளாக இத்திட்டம் தேர்தல் காலங்களில் மட்டும் வேட்பாளர்களால் உச்சரிக்கப்பட்டு உயிர்பெறுகிறது. அதன்பின் விவசாயிகள் ஒலமிட்டும் அவர்களது குரல்கள் உரியவர்களுக்கு எட்டுவதே இல்லை.
விவசாயிகளின் வாழ்க்கை மேம்படவும், விவசாயம் பாதுகாக்கப்படவும், மக்களின் அடிப்படை ஆதாரமான நீர் தேவை பூர்த்தி செய்யப்படவும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதித்து உள்ளதால் அதனை நிவர்த்தி செய்யவும் காவிரி – பொன்னியாறு- திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப் பட்டாக வேண்டும். தேர்தல்களில் கட்சிகள் ஜெயிக்கின்றன. ஆனால் மக்கள் தோற்று விடுகின்றனர். ஆம் அவர்களது எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் கொள்வதே தொடர்கதையாக உள்ளது. இவர்களது துயரங்கள் தொலையும் நாள் எப்பொழுது?
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply