சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை கட்டாயம் ஆக்கிட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி தொடர்பான விவாதம்

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் தற்போது மாணவர் சேர்க்கை குறைவால் படிப்படியாக மூடப்பட்டு வரும் நிலையில் அதனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசர அவசியமான ஒன்றாகும். அரசு பள்ளிகளின் அழிவிற்கு தனியார் பள்ளிகளின் மீதான மக்கள் மோகம் ஒரு புறமிருக்க அரசே பலவகைகளிலும் காரணம் ஆக உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு வரம்பற்ற முறையில் அரசு அனுமதி அளித்து வருகிறது. இதனால் புற்றீசல் போல் பணம் கொட்டும் வணிகமாக கல்வி நிலையங்கள் பெருகிப் போனது.

தற்போது 50கி.மீ தொலைவிற்கு சென்று கூட மாணவர்களை கல்வி நிலைய வாகனங்கள் ஏற்றி வருகின்றன. இதனால் குழந்தைகளின் பள்ளி பயண நேரம் அதிகரிப்பு, உடல் மற்றும் மனசோர்வு, போக்குவரத்து நெருக்கடி, விபத்துகள், சுற்றுசூழல் பாதிப்பு என பாதிப்புகள் தொடர்கிறது. இதனை தடுக்க தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கைக்கு எல்கை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிக்கு 1 கிமீ உயர்நிலை, மேல்நிலை பள்ளிக்கு 5கி.மீ என்ற வகையில் தூரத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகள் தரத்தோடு செயல்படுவதாக கூறும் அமைச்சர்களும், முதல் அமைச்சர்களும் தாங்கள் மட்டும் அம்மருத்துவமனையில் சென்று சிகிச்சை பார்ப்பதில்லை. இது போலவே அரசு பணியினை விரும்பும் அனைவரும் தங்கள் பிள்ளைகளை மட்டும் அரசுப்பள்ளிகளில் சேர்க்க முன்வருவதில்லை. அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பது கட்டாய சட்டமாக்கப்பட வேண்டும் என்ற அலகாபாத் நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியாக வேண்டும்.

தமிழக பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி பயிற்றுவிப்பதற்கு பதிலாக தனியார் பள்ளிகளுக்கு மாற்றாக ஆங்கில வழியில் பயிற்றுவிக்க மேற்கொள்ளப்பட்ட முடிவு தாய்மொழிக்கு நாம் செய்யும் துரோகமாகும். இதனால் தான் தமிழ் பாடத்திலேயே பல ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்ததை நாம் கண்டோம். தாய்மொழியில் பயிற்றுவிக்கப்படாமலே பல கல்வி நிலையங்கள் செயல்படும் நிலையில் நாம் மெல்ல மெல்ல நமது மொழியின் அழிவிற்கு காரணம் ஆகிப்போகின்றோம்.

பல தனியார் பள்ளிகள் எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக செயல்பட்ட போதும் அதிகாரிகளின் ஆசிர்வாதத்தால் இயங்கி வருகின்றன. ஏதாவது ஆபத்துகள் நிகழும் போதே இது வெளி உலகிற்கு தெரிகிறது. இத்தகைய கல்வி கொள்ளை களை எடுக்கப்பட வேண்டும். பொதுப்பள்ளியினை ஊக்குவிக்கும் விதமாக அதன் கல்வி தரத்தை உயர்த்துவதோடு, அடிப்படை கட்டமைப்புகளையும், ஆசிரியர் பற்றாக்குறையினையும் நிவர்த்தி செய்திட வேண்டும். மாணவர்களின் கருவறைகளாய் திகழும் அரசுப்பள்ளிகளை காப்பது அரசின் கடமை மட்டுமல்ல – நம் அனைவரின் கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *