சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
ராணிப்பேட்டை தமிழ்நாட்டின் முக்கிய தோல் ஏற்றுமதி மையமாக விளங்கி வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் கடந்த 1975ல் தமிழ்நாடு குரோமேட்டுகள் மற்றும் ரசாயனங்கள் நிறுவனம் (TNCCL) தொடங்கப்பட்டு குரோமியம் அடிப்படையிலான ரசாயனங்களை உற்பத்தி செய்தது.1995 ல் குறிப்பிட்ட ஆலை மூடப்பட்ட நிலையில் இங்கு 2.5 லட்சம் டன் குரோமிய கழிவுகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இக்கழிவுகள் சுற்றுச் சூழலுக்கும், சுகாதாரத்திற்கும் பெரும் ஆபத்து ஏற்படுத்துவதாக விளங்கி வருகின்றன.
குரோமியக் கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து குடிநீர் மற்றும் விவசாயம், நீர்நிலைகளை பாதித்து உள்ளது. ராணிப்பேட்டை பகுதியில் நிலத்தடி நீரில் குரோமியம் அளவு 277 mg/L வரை கண்டறியப்பட்டு உள்ளது. இது உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த தரமான 0.05 mg/L விட பலமடங்கு உயர்வாகும். 700 ஏக்கருக்கும் மேலான விவசாய விளைநிலங்கள், பாலாற்றில் கலந்த கழிவால் 200 கி.மீக்கும் மேல் பரவி மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கி வருகிறது. இதனால் இந்தியாவின் மிக மோசமாக மாசுபாடு அடைந்த பகுதிகளில் ஒன்றாக இது கண்டறியப்பட்டு உள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாடு ஒருபுறமிருக்க இத்ததைய தேங்கிய அபாயகரமான கழிவுகளால் இப்பகுதி மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர். ராணிப்பேட்டை புற்றுநோயாளிக ளின் தாயகம் என்று சொல்லும் வகையில் புற்றுநோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் குரோமிய கழிவுகளால் தோல் நோய்கள், சுவாச பிரச்னைகள், சிறுநீரக பாதிப்பு, மலட்டுதன்மை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தி வருகிறது. இப்பகுதியில் நிலத்தடி நீரில் கனமான ரசாயனங்கள் கலந்து உள்ளதை 2023ல் நடந்த ஆய்வுகளும் உறுதிபடுத்தி உள்ளன.
காலாவதியாகாத கழிவுகள் இப்பகுதியில் உள்ள 3.5 லட்சம் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் 2010களில் இதனை சுத்திகரிப்பு செய்ய உத்தரவிட்டது. தமிழக அரசு இக்கழிவுகளை அகற்றி மண் மற்றும் நீரை சுத்திகரிக்க 700 கோடி தேவை என மதிப்பீடு செய்து உரியத்தொகையினை வழங்கிட மத்திய அரசிடம் கேட்டது. இதற்கு உரிய நிதி ஒதுக்காத நிலையில் தமிழக அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ரூ 19 கோடி செலவில் தற்காலிக நடவடிக்கை மட்டுமே மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ராணிப்பேட்டை மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ள இக்கழிவுகள் அகற்றப்படுதல் தேவையான ஒன்றாகும். வளர்ச்சி என்ற பெயரில் மண்ணையும், மக்களையும் மாசுபடுத்தி அதன் பின் அவற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு பெரும் பாடு பட வேண்டி உள்ளதற்கு ராணிப்பேட்டை மிக சிறந்த உதாரணமாக விளங்கிவருகிறது. வருங்காலங்களில் வளங் காக்கும் வளர்ச்சியும், மக்கள் நலன் தாக்காத உயர்வும் தேவை. ராணிப்பேட்டையில் சூழ்ந்த குரோமியம் இறங்க மறுக்கும் வேதாளம் போல் இப்பகுதி மக்களின் வாழ்வோடு அச்சுறுத்தி வருவதால் இவர்கள் வாழ்க்கை வேதனையில் கழிகிறது. இதனை நிவர்த்தி செய்திட அரசு போர்க்கால நடவடிக்கை எடுப்பது அவசர அவசியம்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply