சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

அபகரிக்கப்பட்ட கரையால் உடைபடும் ஆபத்தில் பொய்கைகுளம் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

ஆரல்வாய்மொழி அருகே உள்ள பொய்கைகுளத்தில் கரை அபகரிப்பு காரணமாக குளம் உடையும் அபாயம் குறித்து புகார்

மேற்கு மலைத்தொடர்ச்சியில் பொய்கை மலையில் குதிரை தேரி, கடுவாய் தொண்டு பகுதியில் உற்பத்தியாகும் சிற்றோடைகளும், பொய்கை அணை மூலமும் நீர்வரத்து பெறும் பொய்கைகுளம் 45.26.5 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இயற்கை எழில்சூழ்ந்த பகுதியில் அமைந்த இக்குளம் மட்டுமே இதுவரை கழிவுநீர் கலக்காமல் உள்ளதால் ஆரல்வாய்மொழி பேரூராட்சி பகுதி மக்கள் குளிப்பதற்கு இதனை பயன்படுத்தி வருவதோடு இதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதில் இக்குளம் பெரும்பங்காற்றி வருகிறது. இதன் மூலம் பாசனம் பெற்று வந்த நஞ்சை நிலங்கள் தற்போது தரிசாக விடப்பட்டு உள்ளபோதும் குறிப்பிட்ட பகுதியில் தென்னை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருவதால் அதற்கு இதுவே நீர் ஆதாரமாக திகழ்கிறது.

இருந்தும் இக்குளம் உரிய பராமரிப்பின்றி உள்ளதால் நீர் தாவரங்கள் மற்றும் முட்செடிகளின் ஆக்கிரமிப்பினால் பொய்கைகுளம் பொலிவிழந்து காணப்படுகிறது. இக்குளக்கரை வழியாக காலை மற்றும் மாலை வழியாக அநேக மக்கள் வாக்கிங் சென்று வருகின்றனர். இவர்களுக்கு பாதிப்பையும், உயிர் ஆபத்தையும் விளைவித்திடும் வகையில் குளத்தின் கரை சாலையில் முட்செடிகள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் பாதசாரிகளும், வாகனங்களில் செல்வோரும் பெரும் இன்னல்கள் மத்தியில் இவ்வழியினை கடந்து செல்லும் நிலை உள்ளது.

இது ஒரு புறமிருக்க இக்குளத்திற்கே பேராபத்து ஏற்படும் வகையில் இக்குளத்தின் பெரும்பாலான கரைகளின் அநேகப் பகுதிகள் அபகரிக்கப்பட்டு உள்ளது. தங்கள் விளைநிலங்களின் மேடாக இக்குளம் உள்ளதால் கரைப்பகுதிகளை வெட்டி எடுத்து தங்கள் நிலங்களை நீட்டிப்பு செய்து ஆக்கிரமிப்பாளர்கள் வேலிகளை குளத்தின் அருகே அமைத்து உள்ளனர். இதனால் குளத்தின் கரை பலவீனம் அடைந்து பொய்கை குளம் இப்பகுதியில் எந்நேரத்திலும் இடிந்துவிழும் வகையில் உள்ளதால் இக்குளம் உடையும் ஆபத்தினை எதிர்நோக்கி உள்ளது.

இக்குளத்தின் மதகுகள் உடைந்து இவற்றின் மூலம் தொடர்ச்சியாக நீர் வெளியேறி வருகிறது. இந்நீர் பாசன நிலங்களில் தேங்கி விளைநிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலையினை ஏற்படுத்தி வருகிறது. மேலும் விளைநிலங்களில் தேங்கிய நீரால் தென்னை உள்ளிட்ட மரங்களும் நீரால் பட்டுப்போகின்றன. இதனால் குளத்தில் நீரை தேக்க முடியாத நிலை உள்ளதோடு, வெளிவரும் நீரால் பாதிப்பு அடைவதால் திரிசங்கு நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.எனவே பொய்கை குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், அபகரிக்கப்பட்ட கரையினை பலப்படுத்திடவும், மதகுகளை சீரமைத்திடவும் உரிய நடவடிக்கை எடுத்திடும்படி சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, துணை செயலாளர் R.சாராபாய், விவசாய அணிச் செயலாளர் L. வேதக்கண், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E சுரேஷ், தோவாளை ஒன்றிய செயலாளர் Y.ராகுல், ஆரல்வாய்மொழி பேரூர் தலைவர் D சகாய பிரிட்டோ மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *