சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் வழங்க மறுப்புசமூக பொதுநல இயக்கம் கண்டனம்-

தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு நெல்,பருத்தி, கரும்பு, நிலக்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு விவசாயம் செய்ய அரசு குறுகியகால கடன் வழங்கி வருகிறது. மத்திய அரசின் கிஷான் கிரடிட் கார்டு(கேசிசி) மூலம் 7% மானியத்தில் இக்கடன் வழங்கப்படுகிறது.இதை ஓராண்டு காலத்தில் செலுத்திவிட்டால் வட்டி தள்ளுபடி செய்யபடுகிறது.

இந்நிலையில் கடந்த மே 26 ல் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்ட உத்தரவின்படி கூட்டுறவு சங்கங்களில் கடன்பெறும் விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் மட்டுமே கடன் வழங்க வேண்டும் என தெரிவிக்கபட்டு உள்ளது. கடந்த ஜூன் 12ல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிடம் இருந்து அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பபட்டு உள்ளது.இதன்படி சிபில் அறிக்கையினை சமர்ப்பிக்கும் போது வேறு வங்கிகளில் பயிர் கடன் இருப்பது தெரியவந்தால் கடன் வழங்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.

இதனால் விவசாயிகள் பயிர் கடன் கிடைக்காத நிலையில் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர். தமிழ்நாடு அரசு 2025 வேளாண் பட்ஜெட்டில் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடிக்கு ரூ 1477 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. 2025-26 ஆண்டில் ரூ 17000 கோடி அளவுக்கு பயிர் கடன் வழங்க திட்டமிட்டு உள்ளது. இருப்பினும் இதுபோன்ற நிர்ப்பந்தங்களாலும், நிபந்தனைகளாலும் விவசாயிகள் இந்நிதியினை பயன்பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றனர்.

பேரிடர்களை தாண்டி விவசாயத்தில் போட்ட முதலீடு பெற முடியாத சூழலில் விவசாயத்தை விட்டு பலரும் வெளியேறி வரும் நிலையில் அதனை ஊக்குவிப்பதற்கு பதில் அவர்களை முற்றிலுமாய் விவசாயம் செய்ய முடியாதபடி புதிய விதிகள் புறந்தள்ளிஉள்ளது. இதனால் பயிர் கடன் வழங்க மறுப்பதால் கந்துவட்டி காரர்கள் பிடியில் சிக்கி மேலும் கடன் பிடியில் சிக்கவே இத்தகைய விதிமுறைகள் இடம் அளிக்கிறது.

நகர்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகள் முற்றிலுமாய் விவசாயிகளை புறக்கணித்து ஏனைய பெருங்கடன் வழங்குவதிலேயே அதீத ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் விவசாயிகளின் உரிமை பறிபோவதுடன் அவர்களது வாழ்வாதாரம் முற்றிலுமாய் கேள்விக்குறியாகி உள்ளது.ஏற்கனவே உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வு,ஜிஎஸ்டி வரிசுமை போன்றவற்றின் சுமைகளையே தாங்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் பயிர் கடன் மறுப்பால் முழுமையாய் தத்தளிக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகளுக்கு பாதிப்புகள் ஏற்படுவதை தடுத்து பயிர்க்கடன் வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *