சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள பகுதி சந்தையில் பலகாலமாக வியாபாரிகள் கடைகள் நடத்தி வந்தனர்.இந்நிலையில் தனியாரிடம் இருந்த சந்தையை பேரூராட்சியே நேரடியாக நடத்தும் எனவும் அரசின் அடிப்படை நிர்ணய தொகையிலேயே ஏற்கனவே கடைகள் நடத்தி வந்தவர்களுக்கு கடை ஒதுக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இதனை நம்பி 2022ல் வழங்கப்பட்ட மாற்று இடத்தில் இவ்வியாபாரிகள் உரிய வாடகை செலுத்தி கடைகளை நடத்தி வருகின்றனர்.
குறிப்பிட்ட பகுதியில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தங்களுக்கு கடைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தற்போது ஒதுக்கப்பட்ட தற்காலிக இடம் ஒதுங்கி இருந்த போதும் தங்கள் நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் கடந்த 3 ஆண்டுகாலமாக காத்திருந்தனர். தற்போது பேரூராட்சி சார்பில் சந்தை கட்டுமானப்பணிகள் முடிவடைந்து விட்டன. இந்நிலையில் ஏற்கனவே இங்கு வியாபாரம் செய்துவந்த 130 வியாபாரிகளுக்கு கடைகள் வழங்காமல் பேரூராட்சி புறக்கணிப்பதாக கூறப்படுகிறது.
இங்குள்ள கடைகள் கடந்த மாதம் ஏலம் விடப்பட்ட நிலையில் ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை பின்பற்றாமல் வியாபாரிகளை பேரூராட்சி தட்டி கழிப்பதாக தெரிகிறது. மேலும் ஏலம் எடுத்த ஏனைய நபர்கள் செலுத்தும் வாடகையினை விட கூடுதல் தொகை ஏற்கனவே இங்கு கடை நடத்தியவர்களிடம் கேட்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பெரிதும் இவர்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர்.
இதன் பின்னணியில் அரசியல் தலையீடு, நிர்வாக குளறுபடி, முறைகேடு உள்ளதாக தெரியவருகிறது. சந்தையில் பலகாலமாக இருந்து இடஒதுக்கீட்டில் கடை பெற்றவர்களுக்கு அதிகமாகவும் ஏலத்தில் புதிதாக கடை எடுத்தவர்களுக்கு குறைவாகவும் வாடகைத் தொகை உள்ளது ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பதாக உள்ளது.
பாதிக்கப்பட்ட வியாபாரிகள் பிரச்னையினை தீர்த்திடும் வகையிலும், இவ்விவகாரத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை களைந்திடும் வகையிலும் குறிப்பிட்ட சந்தையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 130 கடைகளுக்கு அரசின் அடிப்படை தொகையை பேருந்து நிலையத்தில் நிர்ணயம் செய்தது போல சந்தையிலும் நியமித்திட வேண்டும். முறையாக அரசு விதிகளைப் பின்பற்றி டெண்டருக்கு செய்தது போல் வெளிப்படையாகவும் எழுத்து பூர்வமாகவும் கால அவகாசம் வழங்கிட வேண்டும். வாடகை ஆண்டுக்கு ஒருமுறை என்று இல்லாமல் மாதந்தோறும் வாங்கும் நடைமுறையினை பின்பற்றிட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply