சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
திருநெல்வேலியில் கடந்த 2021ல் அரசு உதவிபெறும் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.இச்சம்பவத்தை தொடர்ந்து பழமையான பள்ளிக் கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்ட தமிழக அரசு முடிவு எடுத்தது. இதன் படி 2022ல் மார்ச் மாதம் 10,030 பழுதடைந்த அரசு பள்ளிக் கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்கள் கட்ட உள்ளதாக அரசு அறிவித்தது. இருப்பினும் இப்பணியில் போதிய அக்கறையும், தீவிரமும் காட்டாத நிலையில் கட்டுமானங்களால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்கதையானது.
2024 ஆகஸ்ட் மாதம் செங்கல்பட்டு மாவட்டம் சிருத்தவூர் அரசு பள்ளியின் வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 மாணவர்கள் காயம் அடைந்தனர். திருப்போரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மேற்கூரை இடிந்து 5 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். 2024 அக்டோபர் மாதம் திண்டுக்கல் மாவட்டம் பழைய அயா குடி அரசு தொடக்கப் பள்ளியின் பால்கனி சுவர் இடிவு/ 2025 ஏப்ரல் மாதம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி அருகே செக் லங்கிரி அரசு நடுநிலைப்பள்ளியின் மேற்கூரை இடிந்து 4 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
2025 ஜூலை மாதம் மதுராந்தகம் அரசு பள்ளியில் கான்கிரீட் கூரை இடிந்து 5 மாணவர்கள் காயம், 2025 செப்டம்பர் மாதம் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சிங்களந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் மேற்கூரை இடிந்தது.டிசம்பர் 3ந்தேதி செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் சுற்றுசுவர் இடிவு/ என பல்வேறு சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வந்து உள்ளது. கடந்த 16ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியின் சுற்றுசுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் மோகித் பரிதாபமாக உயிர் இழந்தான்.
இச்சம்பவங்கள் பெரும்பாலும் பழமையான கட்டிடங்கள், மோசமான பராமரிப்பு, கட்டுமான தரம் குறைபாடுகளால் ஏற்பட்டு வருகின்றன.இருந்தும் பாதிப்புகள் உருவாகும் போது நிவாரணத் தொகை வழங்குவதும், வழக்கு பதிவு செய்வதும் அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது என அரசு தனது கடமையை முடித்து கொள்வதால் இது போன்ற சம்பவங்கள் முடிவின்றி தொடர்கிறது. மாணவர்கள் தான் நாட்டின் எதிர்கால தூண்கள். வகுப்பறையில் அவர்களுக்கு கல்வி வழங்கப்படும் முக்கியத்துவத்தை போலவே கட்டமைப்புகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தி அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது அவசியம்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே எடுத்த கணக்கெடுப்பின்படி பழுதடைந்த கட்டிடங்கள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. இதுபோல மாற்று கட்டிடங்களும் எழுப்பபடவில்லை. மேலும் சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட கட்டுமானங்கள் பழுதடைந்த நிலையில் பலிவாங்க காத்திருக்கிறது. இருந்தும் இதனை மாற்றிட தீவிர நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.கல்வியில் சிறந்த தமிழ்நாடு என அரசு விழா எடுப்பதில் காட்டும் முனைப்பை இவ்விஷயத்திலும் காட்டிட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply