சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
திருச்சி என்றதும் நம் எல்லோருக்கும் நினைவில் வருவது மலைக்கோட்டை. அதே திருச்சியில் 10ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உய்யக்கொண்டான் கால்வாய் பற்றி நீங்கள் அறிவீர்களா? ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும்,வளமைக்கும் அடிப்படையானது நீர் ஆதாரமே என்பதை உணர்ந்து தமிழர் வீரத்தையும், பெருமையும், வரலாற்றையும் உலகுக்கு பறைசாற்றிய மாமன்னன் இராஜராஜ சோழன் எண்ணற்ற ஏரி குளங்கள், கால்வாய் வெட்டி முறையாக பராமரித்து வேளாண் பொருளாதாரம், கால்நடை செல்வம் பெருக வழிவகை செய்தான்.
காவிரியின் தென்கரையில் குளித்தலைக்கு மேற்கே பத்து கல் தொலைவில் உள்ள மாயனூர் என்னும் இடத்தில் இருந்து கால்வாய் வெட்டி ராயமுண்டான்பட்டி. வெண்டையம்பட்டி, வையாபுரிபட்டி, சுரக்குடிப்பட்டி, காங்கேயம்பட்டி, சோழகம்பட்டி, விண்ணணூர்பட்டி, வேலிபட்டி, புதுப்பட்டி என எண்ணற்ற பகுதி ஏரிகளுக்கு பாசனத்திற்காய் வெட்டப்பட்ட 71கி.மீ கொண்ட இக்கால்வாய் 120 கிளை வாய்க்கால்களுக்கு நீரை அளித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் சேராண்டி ஏரியுடன் முடிவடைகிறது. இதன்மூலம் 40 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வந்ததோடு கரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும் திகழ்ந்தது.
1200 ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருந்து மக்களுக்கு பலன் கொடுத்த இக்கால்வாய் தற்போது கழிவுகளும் குப்பைகளும் சங்கமமாகி சாக்கடையாக மாறி முப்போகம் விளைவித்த கால்வாய் இப்போது மூக்கை மூடி கடக்கும் நிலைக்கு உருமாறிப்போனது. திருச்சி மாநகரில் மட்டும் 8கி.மீ பயணிக்கும் தூரத்தில் பெரும்பகுதி கழிவுநீரும் கலந்து இதனை பயன்படுத்த முடியாத நிலைக்கு மக்கள் மாற்றிவிட்டனர். திருச்சி மாவட்டத்தின் விவசாயத்திற்கு பெரும்பங்காற்றிய உய்யகொண்டான் கால்வாய் கைவிடப்பட்ட நிலையில் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
வட இந்தியாவில் நகருக்குள் பாய்ந்தோடும் சபர்மதி ஆற்றைப் போல் இருக்க வேண்டிய இந்நதி இன்றோ ஆக்கிரமிப்புகளால் தன் அளவு குறுகி, கரையோரப் பகுதிகள் கருவேல மரங்களும், நீர்பரப்பில் ஆகாய தாமரைகளும் வளர்ந்து திருச்சியின் கூவமாய் தென்படுகிறது. அக்காலத்தில் வெள்ளப்பெருக்கை சமாளிக்கவும், விவசாயிகளுக்கு நீர்பாசனம் அளிக்கவும் அக்கால தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட கால்வாய் நமது அலட்சியப் போக்கால் வெகுவேகமாய் அழிந்து வருகிறது.
சுற்றுச்சூழல் மீட்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தவும், விவசாயம் காக்கவும் உய்யகொண்டான் கால்வாய் காப்பாற்ற பட்டாக வேண்டும். பழம்பெருமை வாய்ந்த ஒரு நீர்நிலை தன் இன்னுயிரை இழப்பதற்கு ஒருவிதத்தில் நாமும் காரணமாய் இருக்கின்றோம். எனவே அசுத்த நீர் இதில் கலக்க விடாமல் தடுப்பதோடு, ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாய் சுத்தம் செய்யப்பட்டாக வேண்டும். எல்லோரும் நம் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றோம். அதைப்போலவே நமது நகரமும், ஆறும் சுத்தமாக இருக்க வேண்டும் என எண்ண ஏன் மறுக்கிறோம்?
தலைமை செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply