சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மனித குல வளர்ச்சி விண்ணை முட்டிய போதிலும் மனதளவில் இன்னும் அகல பாதாளத்தில் இருப்பதற்கு தீண்டாமைச் சுவரே அத்தாட்சி. சாதி பாகுபாட்டின் அடையாளமாக இச்சுவர் ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதியை பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து பிரித்து வைக்கும் நோக்கில் கட்டப்படுபவை. இதன்மூலம் தலித் மக்களின் சுதந்திர த்தை தடுக்கவும், அவர்களை ஒதுக்கிவைக்கவும் முயல்கின்றனர். இது சட்டவிரோதமான தீண்டாமை நடைமுறையின் ஓர் வடிவமாகும்.
மதுரை மாவட்டம் உத்தபுரம் பகுதியில் 1989 சாதி கலவரத்திற்கு பின் கட்டப்பட்ட 600 மீ நீளமுள்ள தீண்டாமைச் சுவர் 2008ல் போராட்டங்களுக்கு பின் இடிக்கபட்டது. விருதுநகர் மாவட்டம் விஸ்வநாதம் பகுதியில் தலித் மக்களின் இடுகாட்டை மறைக்க எழுப்பபட்ட இச்சுவர் 2004 ல் அகற்றபட்டது. கோவை மேட்டுப்பாளையத்தில் தலித் காலனியை பிரித்த சுவர் 20 19ல் இடிந்து உயிர் இழப்பிற்கு காரணமானது. கரூர் மாவட்டம் முத்து ளாடம்பட்டி 200 அடி நீள சுவர் போராட்டங்களின் விளைவாக அகற்றப்பட்டது.
இத்தோடு தீண்டாமைச் சுவர் பிரச்னை முடிந்து விடவில்லை. தமிழ்நாட்டில் திருவள்ளூர், விருதுநகர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இத்தகைய பிரச்னை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் பேரூராட்சி 14வது வார்டில் செல்வமணி நகரில் சுமார் 200 மீ நீளமும், 9 முதல் 10 அடி உயரம் கொண்ட தீண்டாமைச் சுவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது.
கோவில்பத்து மற்றும் அதனை ஒட்டி உள்ள பாதிரிபுரம் பகுதியில் வசிக்கும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கும், பள்ளி மற்றும் மருத்துவமனை, பணி இடங்களுக்கு களுக்கு செல்லவும் பயன்படுத்தி வந்த பாதை அடைக்கப்பட்டதால் பலகி.மீ சுற்றி ஆபத்தான பகுதிகளை கடந்து இக்கிராம மக்கள் பயணித்து வருகின்றனர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் பொது பாதை ரியல் எஸ்டேட் விற்பனை மதிப்பை கருத்தில் கொண்டு இந்த தீண்டாமை சுவரை எழுப்பி உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்ட சுவரை அகற்ற கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியதின் விளைவாக அமைதி குழு கூட்டத்தை நடத்திய வருவாய்துறை இப்பிரச்னை தொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தீண்டாமையினை தடை செய்து உள்ள போதும் சமூகத்தில் இத்தகைய இழிவான நடைமுறை நீடிப்பது நாகரிக சமூகத்திற்கு அழகல்ல. சமூகநீதியினையும், நல்லிணக்கத்தையும் பாதுகாத்திடும் வகையில் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு குறிப்பிட்ட தீண்டாமைச் சுவரை உடனடியாக அகற்றிட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply