சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
திருவண்ணாமலை கோவிலுக்கு வாகனத்தில் 30.9.25 இரவு தனது சகோதரியுடன் வந்த ஆந்திராவைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் அந்தல் பைபாஸ் சாலை அருகே காவல்துறையினரால் வழிமறிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை வலுக்கட்டாயமாக திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த இரு காவலர்கள் அழைத்து சென்று இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.பின்னர் அவர்களை தாக்கி சாலை ஓரத்தில் விட்டு சென்றதாகவும் இவர்களை அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இரு காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது சிறுமிகள் முதல் முதியோர் வரையில் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2024 – 25ல் மேலும் 10% பாலியல் வன்முறைகள் அதிகரித்து உள்ளதை பதிவான வழக்குகள் மூலம் அறியலாம். குற்றங்கள் நடந்தால் அதனை தடுக்க வேண்டியது காவல்துறை.ஆனால் மக்களுக்கு காவலாக இருக்க வேண்டிய காவலர்களே கயவர்களாய் மாறுவது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. திருவண்ணாமலையில் நடந்த காவல்துறையினரின் பாலியல் அத்துமீறலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
முக்கிய ஆன்மீகத்தலமான திருவண்ணாமலையில் சமீபகாலமாக பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது. கடந்த மார்ச்.2025 பிரான்ஸ் நாட்டு பெண் பாலியல் சீண்டலுக்கு உள்ளானார். ஜூலை 2025 நேபாள நாட்டை சேர்ந்த பெண் இதுபோல் பாதிப்பிற்கு உள்ளானார். இத்தகைய தொடரும் சம்பவங்கள் பக்தர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி வருகிறது.
திருவண்ணாமலைக்கு கிரிவலம், தியானம் மேற்கொள்ள வரும் பெண் பக்தர்கள் இவ்வாறாக தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது தடுக்கப்பட வேண்டும். இவற்றை தடுக்கும் நிலையில் உள்ளவர்களே தடம் மாறும் சூழலில் காவல்துறையின் மீதான நம்பகதன்மையினை இழக்கும் நிலைக்கு நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் தள்ளி உள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தில் தொடரும் பாலியல் கொடுமைகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்தாக வேண்டும். இதுபோன்ற செயலில் ஈடுபடும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply