சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

திருப்பதிசாரத்தில்குடிநீர் விநியோகம் தடை – நான்கு மாதமாக தவிக்கும் மக்கள்

அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தோவாளை ஒன்றியம் திருப்பதிசாரம் ஊராட்சிக்கு உட்பட்ட வசந்தம்நகர், நெசவாளர் நகர், நாஞ்சில் நகர், வீராணமங்கலம் மற்றும் தேரேகால்புதூர் உள்ளிட்ட இதனை ஒட்டி பல்வேறு கிராமங்களுக்கும் குடிநீர் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்பகுதியில் கடந்த நான்கு மாத காலமாக குடிநீர் வரவில்லை.

வீரநாராயணமங்கலம் முதல் திருப்பதிசாரம் வரையிலான சாலையில் தேரேகால் கால்வாய் பக்கவாட்டில் சுவர் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் குடிநீர் வடிகால் வாரியம் இக்கிராமங்களுக்கு விநியோகம் செய்வதை நிறுத்தி உள்ளதாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இப்பணிகள் மந்த கதியில் நடந்துவந்த நிலையில் தற்போது கால்வாயில் நீர்செல்வதால் பணி முழுமையாக முடங்கி உள்ளது.

கடந்த நான்கு மாத காலமாக குடிநீர் விநியோகம் இல்லாததால் திருப்பதிசாரம் சுற்றுவட்டார பகுதி கிராமமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குடிநீருக்காக பல கி.மீ செல்லவேண்டிய சூழ்நிலையில் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கால்வாய் சுவர் கட்டுமானப்பணிகள் முடங்கி உள்ள தால் எப்போது இப்பணிகள் முடிவடையும்? எப்போது தங்கள் தாகம் தீர்த்திட குடிநீர் வழங்கப்படும்? என்ற மில்லியன் டாலர் கேள்விகளுடன் இப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் வழங்குவதில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் நான்கு மாத காலமாக மக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இக்கட்டுமான பணிகள் நடைபெறுவதற்கு முன்பாகவே முன் எச்சரிக்கை நடவடிக்கையின் கீழ் மாற்று ஏற்பாடுகளை துறையினர் செய்திருக்கலாம். பருவமழை தொடங்கும் முன்பாகவே கட்டுமானப்பணிகளை முடித்து இருக்கலாம். பணிகள் நடந்த போதிலும் மாற்றுப்பகுதியில் குடிநீர் குழாய்களை அமைத்து நீர் தேவையினை நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் இது எதுவுமே செய்யாததால் மக்கள் குடிநீர் பிரச்னையினை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

எனவே மேலும் காலதாமதம் செய்யாமல் நீரின்றி தவிக்கும் திருப்பதிசாரம் சுற்றுவட்டார பகுதி கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொதுசெயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர்T. குழந்தைசாமி,செயலாளர் P.சந்திரா, தோவாளை ஒன்றிய செயலாளர் y. ராகுல் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *