நாகர்கோவில் நகரின் பிரதான பகுதியாக திகழ்வது பார்வதிபுரம். இங்குள்ள மேம்பாலத்தின் அடிவாரத்தில் பஸ் நிறுத்தத்தை ஒட்டிஉள்ள பகுதியில் மாநகராட்சியின் சார்பில் சுகாதாரத்தினை பாதுகாத்திடும் நோக்கத்தில் கழிப்பிடம் கட்டப்பட்டது. இது ஆண்கள், பெண்கள் பயன்படுத்தும் வகையிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திடும் வகையிலும் சிறப்பாக கட்டிமுடிக்கப்பட்டு உள்ளது. இருந்தும் பொதுமக்கள் இதனை பயன்படுத்திடாத வகையில் பூட்டப்பட்ட நிலையில் கிடக்கிறது. கட்டி முடிக்கப்பட்டு பலகாலம் ஆனதற்கான சாட்சியாக கட்டுமான இடைவெளிகளில் புதர்செடிகள் வளர்ந்து உள்ளன.
சுகாதார வளாகம் திறக்கப்படாததால் எவ்வித பயனும் இன்றி பராமரிப்பின்றி,பாழடைந்து காணப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு வரும் பயணிகள் புறநகர் பகுதிகளுக்கும், வடசேரி, மீனாட்சிபுரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் மூலம் பயணிக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு அடிப்படை தேவையான இயற்கை உபாதைகளை கழிக்க கழிப்பிடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டும் இவர்களுக்கு எந்த வகையிலும் பயனும் அளிக்காமல் திறக்கப்படாமல் உள்ளதால் கழிப்பிடம் எவ்வித பயனும் அளிக்காமல் காட்சிப்பொருளாகவே காட்சி அளிக்கின்றது. இதனால் மக்களின் வரிப்பணம் விரயமாகும் பரிதாப நிலையில் பயன்படாமலே பயனற்றுப் போகும் சூழலில் இக்கழிப்பிடம் உள்ளது.
எனவே சுகாதாரத்தை பாதுகாத்திடவும், பயணிகள் பயன்படுத்திடவும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள சுகாதார வளாகத்தினை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் சார்பில் அதன் பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் செய்தி தொடர்பாளர் R.சேர்மா கணேஷ், குமரி மாவட்ட துணைத்தலைவர்கள் S.ஜேசுராஜ், S.அருள்ராஜ் நாகர்கோவில் மாநகர பொறுப்பாளர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.











Leave a Reply