சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழகத்தில் நீர்நிலைகளை ஆறு, ஏரி, கண்மாய்,கரனை, தாங்கல், ஏந்தல். ஊரணி, குளம், குட்டை என வகைப்படுத்தி நமது முன்னோர்கள் சிறந்த நீர் மேலாண்மையில் ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் 39,202 ஏரிகள்-கண்மாய்கள் இருப்பதாக பொதுப்பணித்துறை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இவற்றின் நிலை பரிதாபத்திற்கு உரியதாகவே உள்ளன. ஆறுகள் சாக்கடைகளாகவும், குளங்கள் குப்பை கூடங்களாகவும், மண் மேடாகவும் மாறி வருவது நமது நீர்நிலை குறித்த சிந்தனையினை வெளிப்படுத்துவதாக உள்ளது.
நமது நீர்நிலைகளை சரிவர பராமரிக்காமல் அதனை தேவையற்ற இடமாக கருதி தனக்கு தேவைக்கு ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால் நீரின் சேகர பரப்பு குறைந்து போகிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் வெள்ள அபாயம் ஏற்படுவதும், வறட்சி காலங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. தமிழகத்தில் பயிர் சாகுபடிக்கு ஏற்ற நிலப்பரப்பு 83,33,583 ஹெக்டேர் நிலமாகும். இதில் பாசனம் பெறுவதோ 28,73, 197 ஹெக்டேர் நிலம்தான். இதனால் மானாவாரி தரிசாக 54,60,386 ஹெக்டேர் நிலங்கள் உள்ளது.
இதற்கு முழுமுதல் காரணம் நாம் உரியமுறையில் நீரை சேமிக்கவும், அதனை பயன்படுத்துவதை தவறியதும் தான். கடலுக்கு அதன் தேவையை விட அதிகமான டி.எம்.சி நீரை நாம் வழங்கி விட்டு மற்ற மாநிலங்களிடம் நாம் கையேந்தி நிற்கும் நிலையே உள்ளது. காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளவும், உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையவும், நிலத்தடி நீர் ஆதாரத்தினை பாதுகாக்கவும், சுற்றுசூழல் காக்கப்படவும் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இதனை கவனத்தில் கொண்டு தி.மு.க அரசு தனது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், ஓடைகள் உள்ளிட்ட அனைத்து நீர்வளங்களையும் வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்கவும், கண்காணிக்கவும் அவை தொடர்பான அரசின் சார்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 75000 இளைஞர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.இதில் 30 ஆயிரம் பேர் பெண்கள் நியமிக்கப்படுவர் என அறிவித்து இருந்தது.
ஆட்சிகாலம் 4 ஆண்டுகளை கடந்தபின்பும் இந்த வாக்குறுதியினை நிறைவேற்றுவதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை. இதுபோலவே ஆறுகள் மாசடைவதை தடுக்க தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்பு திட்டம், நீர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட திட்டங்களும் நடைமுறைபடுத்தப்படாததால் வாக்குறுதிகளாகவே உள்ளன. இயற்கை வளம் காக்கவும், சுற்றுசூழல் மேம்படவும், நீர் ஆதாரம்/விவசாயம் செழிக்கவும் இத்திட்டம் பயன் உள்ளதாக அமையும் என்ற எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தருவதாகவே உள்ளது. எஞ்சிய ஆட்சிக்காலத்திலாவது இதனை செயல்படுத்தி ஆட்சியாளர்கள் நம்பி வாக்களித்தவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யாது என நம்புவோம்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply