சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி சுமார் 128கி.மீ பயணித்து புன்னைக் காயல் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது தாமிரபரணி. இந்த ஆற்றில் உள்ள 12 அணைகள் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86,107 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களின் தாகத்தை தணிக்கிறது. பல்வேறு பெருமைகளுக்கு சாட்சியாய் திகழும் தாமிரபரணியில் கலக்கும் அதிகமான கழிவுநீரால் தனது தரத்தை இழந்து பயன்படுத்த தகுதியற்ற நீராக மாறிவருவது கவலை அளிப்பதாகவே உள்ளது.
திருநெல்வேலியில் கருப்பந்துறை முதல் வெள்ளிக் கோயில் வரை 27 இடங்களில் ஆற்றில் கழிவுநீர் கலந்து வருகிறது. ஆட்சியர் அலுவலகம் அருகே ஆற்றங்கரை திறந்தவெளி கழிப்பிடமாகவே மாறிப்போனது. திருநெல்வேலியில் மட்டும் ஒரு நிமிடத்திற்கு 11 லட்சம் லிட்டர் கழிவுநீர் தாமிரபரணியில் கலப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு ஆலைகளின் கழிவுகளும் இதில் திறந்துவிடப்படும் நிலையில் நுரைதள்ளியபடி மக்கள் இதனை பயன்படுத்த இயலாத நிலைக்கு உருமாறிப் போனது.
ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த 2024 நவம்பரில் நீதிபதிகள் குறிப்பிட்ட இடங்களை பார்வையிட்டு உத்தரவுகள் பிறப்பித்தனர். மாசுகட்டுப்பாட்டு வாரியம் பல இடங்களில் ஆய்வு நடத்தி நீர் மிகுந்த மாசுபட்டு உள்ளதை உறுதி செய்து உள்ளது. இதன்படி கழிவுநீர் கலந்தால் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை தெரிவித்து இருந்தது. இருந்தும் இதனை கண்டுகொள்ளாத நிலையில் கழிவுநீர் கலப்பு தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
பொதிகை மலையில் உற்பத்தியாகி பாபநாசத்தை தாமிரபரணி எட்டும்போது பரிகாரங்கள், முன்னோருக்கு திதி கொடுத்தல் உள்ளிட்ட பரிகார சடங்குகளின் போது ஆறுகளில் விடப்படும் துணி உள்ளிட்ட பொருட்கள் ஆறு மாசுபாட்டிற்கு மேலும் காரணம் ஆகிறது. இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை ஆற்றில் கொட்டுவதால் ஆறு குப்பைத் தொட்டியாக மாறிவருகிறது. சமீபத்தில் இங்கு மேற்கொள்ளபட்ட பணியின்போது 92.8 டன் துணிகள், 4540 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், 1720 கிலோ உலோக துண்டுகள், 580 கிலோ காலணிகள், 975 கிலோ கண்ணாடி, 1800 கிலோ மண்பானை ஓடுகள், 3.5 டன் உடைந்த சிலைகள் மீட்கபட்டது.
இவ்வாறு தொடர்ந்து தாமிரபரணியில் கழிவுகள் கொட்டப்படுவதும், கழிவுநீர் கலப்பதுமாக உள்ளதால் அது தன் ஜீவனை இழந்து வருகிறது. எனவே இதனை மீட்கும் வகையில் தாமிரபரணி ஆறு முழுமையாக அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றிட வேண்டும்.கழிவுநீர் கலப்பதும், கழிவுகள் கொட்டப்படுவதும் தடைசெய்யப்பட்டு மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு இதற்கென தனியாக திட்டமிட்டு நிதி ஒதுக்கீடு செய்து அழிவின் விளிம்பில் உள்ள தாமிரபரணியை காப்பாற்ற வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply