நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு வள்ளியாறு பகுதியில் இரணியல் அருகே குட்டித் தோட்டம் பகுதியில் 9 உறிஞ்சு கிணறுகள்(உறை கிணறுகள்) அமைக்கப்பட்டு அங்கிருந்து மேல்நிலை தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு அதன் பின் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நீர் ஆற்றில் உள்ள கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்படாமல் நேரிடையாகவே மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த நீரையே ஊராட்சியை சேர்ந்த பல ஆயிரம் மக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக இந்நீர் மாசுபாடு கொண்டதாக காணப்படுவதோடு கலங்கலாக உள்ளது. இதனால் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் இப்பகுதி மக்கள் உள்ளாகும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். இருந்தும் இப்பகுதியில் வேறு எவ்வித நீர் ஆதாரமும் இல்லாததால் இதனையே நம்பி இருக்க வேண்டிய நிலையில் வேறு வழியின்றி மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழலுக்கு முக்கிய காரணம் நீர் விநியோகம் செய்யப்படும் பகுதியில் வள்ளியாற்றில் ஆகாய தாமரைகள் உள்ளிட்ட அநேக தாவரங்கள் ஆறு தெரியாதபடி மூடி படர்ந்து உள்ளதோடு அதன் தழைகள் அவ்விடத்தை மாசுபடுத்தி வருகிறது. அத்தோடு ஆற்றில் வரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை தேக்கி மேலும் பாதிப்புகளும் சுகாதார சீர்கேடும் ஏற்படுவதற்கு காரணமாகின்றது.இங்குள்ள உறைகிணறுகள் ஆற்றுவெள்ளம் அதிகரித்தால் அதன் வெள்ளம் கிணறுகளை மூடிடும் அவலத்தினையே எதிர்நோக்கி உள்ளது.
மேலும் கிணறுகளில் இருந்து சீராக நீர் விநியோகம் செய்ய முடியாத நிலையும் உள்ளது. இங்குள்ள மின்மோட்டார்களுக்கு வரும் மின்கம்பிகள் மின்சார வாரியத்தினரால் சரிவர பராமரிப்புக்கு உள்ளாக்கப்படாததால் குடிநீர் விநியோகம் அடிக்கடி தடைபடுகிறது. இது மேலும் இப்பகுதி மக்களை குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிக்கு உள்ளாக்கி வருகிறது. எனவே இப்பகுதி மக்களுக்கு எவ்வித தொய்வின்றி நீர் விநியோகம் செய்யவும், நீர் மாசுபடுவதை தடுக்க வள்ளியாற்றில் குறிப்பிட்ட பகுதிகளில் தேங்கிய கழிவு குப்பைகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, துணை தலைவர் S.ஜேசுராஜ், செயலாளர் P.சந்திரா, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் E.சுரேஷ், தக்கலை ஒன்றிய செயலாளர் L. தேன் ரோஜா, நுள்ளி விளை ஊராட்சி தலைவர் பர்ணபாஸ், மேல்பாறை கிளை தலைவர் நாகராஜன், செயலாளர் வின்சென்ட் மகளிர் அணி தலைவர் நிர்மலா செயலாளர் சுஜா மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply