சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு–
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களே நிர்வகிக்கின்றன. தமிழ்நாட்டில் தற்போது 22 அரசு பல்கலைக்கழகங்களும்,2 மத்திய பல்கலைகழகங்களும் 29 நிகர்நிலை பல்கலைகழகங்களும் உள்ளன. பல்கலைகழகத்தினை துணைவேந்தரே நிர்வகிப்பார். இவரது தலைமையிலே செனட், சின்டிகேட், ஆட்சிமன்றக்குழு இயங்கும். பல்கலையின் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது முதல் பணி இடங்களை நிரப்புவது, பாடதிட்டங்களை தயார் செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் இவரே பொறுப்பாளி ஆவார்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பல்கலை கழகத்தின் தலைமை பொறுப்பிற்கு துணைவேந்தர் நியமிக்கப்படாமல் 14 பல்கலைகழகங்கள் உள்ளன. 1857ல் தொடங்கப்பட்ட பழமைவாய்ந்த சென்னை பல்கலைகழகம், 560 பொறியியல் கல்லூரிகளின் தாய்வீடான அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைகழகம், அண்ணாமலை பல்கலைகழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், தமிழ் பல்கலைகழகம், பாரதியார் பல்கலைகழகம், பாரதிதாசன் பல்கலைகழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைகழகம், பெரியார் பல்கலைகழகம், தமிழ்நாடு Dr.அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம், திருவள்ளுவர் பல்கலைகழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைகழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைகழகம் ஆகியவையே அவை.
இந்நிலை தொடர்ந்தால் வரும் ஜனவரி மாதம் அன்னை தெரசா மகளிர் பல்கலைகழகம், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகம் துணைவேந்தர் இல்லாமல் பட்டியல் நீளும். இத்தகைய நிலைமையினால் பல்கலைகழகங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி பணிகள் முழுமையாக முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. மேலும் கல்வியும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. துணைவேந்தர்கள் இல்லாமல் பல பல்கலையில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை. சில பல்கலைகளில் விழாக்கள் நடத்தப்பட்டாலும் துணைவேந்தர் கையெழுத்து இன்றி வழங்கப்பட்ட பட்டங்களால் மதிப்பில்லை என்பதால் மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
துணைவேந்தர் நியமனம் என்பது மாநில அரசு பரிந்துரை செய்பவரையே துணைவேந்தராக நியமிப்பது என்பது வழக்கமான நடைமுறையாய் இருந்தது. ஆனால் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுனர் இதனை அரசியல் கருவியாய் பயன்படுத்தியதின் விளைவாக துணைவேந்தர் தேர்வுகுழுவிவில் யு.ஜி.சி எனப்படும் பல்கலைகழக மானிய குழுவின் பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்ற தமிழக ஆளுனரின் பிடிவாதப்போக்கால் மோதல் ஏற்பட்டு உச்சநீதிமன்றம் வரை இப்பிரச்னை சென்றது.
கடந்த ஏப்ரல் மாதம் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக முதல்வருக்கு வழங்குவது தொடர்பாக அரசு சட்டம் இயற்றியது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் துணைவேந்தர் நியமனம் தள்ளிப்போகிறது. இதனால் கடந்த 30 மாதங்களுக்கும் மேலாக பல்கலைகழக நிர்வாகங்கள் தள்ளாடி வருவதால் மாணவர்கள் தடுமாறி வருகின்றனர். நாட்டின் முன்னேற்றம் கல்விவளர்ச்சியில் உள்ளது. தமிழகத்தில் 70% மாணவர்கள் உயர்கல்வி பயிலும் நிலையில் இதுபோன்ற சூழல் அவர்களது எதிர்காலத்தையே கேள்விகுறியாக்கி விடும். கல்வியில் அரசியல் இருக்கலாம். அரசியலில் கல்வி வேண்டாம்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply