சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
நகர்புற விரிவாக்கம், சாலை மேம்பாட்டு பணிகள், வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தும் போது மரங்கள் வெட்டப்படுவதால் பசுமை பரப்பளவு வெகுவாக குறைந்து காலநிலை மாற்றத்திற்கும், புவிவெப்பமயமாதலுக்கும், சூழல் சீர்கேட்டிற்கும் பெரிதும் காரணமாகிறது. காப்பு காடுகள், காப்பு நிலங்கள் மலைகள் அல்லாத பொது நிலங்களில் உள்ள மரங்களை பாதுகாக்க இதுவரை தனி சட்டம் இயற்றப்படவில்லை. இதனால் பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க இயலாத நிலையே உள்ளது.
பனை மரங்களை காக்கும் வகையில் கடந்த 18.9.25 அன்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன்படி கிராமம் வாரியாக பனைமரங்கள் இருப்பு பதிவேடு பராமரிக்கவும், மரங்களை வெட்டாமல் தடுக்கும் வகையில் கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் வருவாய்,பொதுப்பணி, நெடுஞ்சாலை, உள்ளாட்சி துறைகளுக்கு உரிய இடங்களில் உள்ள மரங்கள் மற்றும் அமைப்புகள், தனிநபர்களால் வைத்து பராமரிக்கப்படும் மரங்களுக்கு என இதுவரை எவ்வித சட்ட பாதுகாப்பும் இல்லாததால் பொதுச்சொத்தான மரங்கள் அவரவர் விருப்பத்திற்கு கபளீகரம் செய்யப்படுகின்றன.
கடந்த 2010ல் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் வளர்ச்சிப் பணிகளுக்கென வெட்டப்படும் ஒரு மரத்திற்கு ஈடாக 10 மரங்களை நடவேண்டும் என உத்தரவிட்டது.ஆனால் இது எந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சென்னை நகராட்சி சட்டம் Act 1919 பொது வீதிகளில் உள்ள மரங்கள் தனியார் சொத்து அல்ல. பொது சொத்து என்கிறது. இருப்பினும் இவை நடைமுறைபடுத்த இயலாத நிலையே உள்ளது.
கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பொது இடங்களில் உள்ள மரங்களை பாதுகாக்க தனி சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.
உயிர்ம நேயத்தை மரபாக கொண்ட தமிழ்நாட்டில் இதுவரை இதற்கான சட்டம் இயற்றப்படவில்லை. இதனால் 33% பசுமை பரப்பாக கொண்டுவரும் முயற்சிகள் பலன் அளிக்காததாகவே உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு முன்னோடித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதோடு சுற்றுசூழல் மேம்பாட்டிற்கென தொண்டாற்றுபவர்களுக்கு விருது வழங்கியும் சிறப்பித்து வருகிறது.
காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு பசுமை இயக்கம் 2022 என்னும் செயல்திட்டமும் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் அப்பணிக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாகவும், சுற்றுசூழலை காக்கும் வகையிலும் மரங்கள் பாதுகாப்பு சட்டத்தினை தமிழக அரசு இயற்ற வேண்டும். மேலும் உள்ளாட்சி தோறும் மரங்கள் ஆணையத்தை நிறுவி மரங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply